இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அனுப்பப்பட்ட மேலும் 625,000 டொலரும் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இருந்து அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர், தங்களுக்கு வந்து சேரவில்லை என அமெரிக்க அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவித்ததை அடுத்து, அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் திருடப்பட்டது குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அனுப்பப்பட்ட பணம் மாயமானது குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் அஞ்சல் திணைக்களமும் விசாரணைகளை நடத்தி வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
இந்தப் பரிவர்த்தனைகள் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்டக் கண்டுபிடிப்புகளில் இருந்து தெரியவந்துள்ளது.
“இலங்கை பணத்தைச் செலுத்திவிட்டது, ஆனால் அமெரிக்க அஞ்சல் சேவை தங்களுக்குப் பணம் வந்து சேரவில்லை என தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினை குறித்த விசாரணைகள் பல வாரங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டது.
முறைகேடுகள் தொடர்பான தனித்தனி சம்பவங்கள் குறித்து அரசாங்க மட்டத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து என்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது, ஆனால் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்பதை என்னால் கூற முடியும்,” என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
