உலக மக்களுக்கு அமைதியின் செய்தியைப் பகிர்ந்து, பௌத்த தர்மத்தின் பாரம்பரியத்தை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், இலங்கையில் 07 நாட்களாக நடைபெற்ற ‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வண, பஞ்ஞாகர தேரர் நேற்று (28) இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
எஹிபஸ்ஸிகோ” அமைதிக்கான நடைபயணத்தை இலங்கையில் மிகவும் வெற்றிகரமாக நடத்துவதற்கு வழங்கப்பட்ட அரச அனுசரணைக்கு தனது நன்றியைத் தெரிவித்த வண, பஞ்ஞாகர தேரர், இது உண்மையிலேயே ஊக்கமளிக்கும் ஒரு அனுபவம் என்று குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் உலகிற்கும் இடையில் ஒரு பாலமாகச் செயற்படும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ‘தம்மசேதிய’ திட்டத்திற்காக, புனித ஜய ஸ்ரீ மகா போதியின் கன்றைப் பரிசாக வழங்கியமைக்கும், அமெரிக்காவின் ‘ஹங் தாவோ விபஸ்ஸனா தியான மையத்தில்’ நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் விழாவின் போது, புனித தந்த தாதுவைக் காட்சிப்படுத்துவதற்கு அனுமதி வழங்கியமைக்கும் அவர் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.
அதேபோல், வீதியின் இருபக்கங்களிலும் ‘ஆலோக்கா’ மற்றும் ஏனைய விலங்குகள் மீது காட்டப்பட்ட அன்பு, பாதுகாப்பு மற்றும் கருணை ஆகியவற்றைப் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாராளத்தன்மை, நம்பிக்கை மற்றும் சிறந்த விருந்தோம்பலுக்காக மகா சங்கத்தினருக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட இலங்கை மக்களுக்கும், பாதுகாப்புப் பிரிவினர்களுக்கும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கால்நடை மருத்துவக் குழு, மருத்துவக் குழு மற்றும் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் வண, பஞ்ஞாகர தேரர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
அமைதிக்கான நடைபயணம் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பௌத்த எழுச்சியைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாத்து, இலங்கையை அமைதி மற்றும் மனிதாபிமானத்தின் தீவாக மேம்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதற்காகவும், உலக அமைதிக்காகவும் வண, பஞ்ஞாகர தேரர் ஆற்றிவரும் அர்ப்பணிப்பிற்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
வண,மெல்பிடியே விமலகித்தி தேரர், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தலைவர் சிசிர அமரபந்து ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.










