ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr. Mohamed Muizzu) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மாலைதீவு மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் மேம்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr Mohamed Muizzu) இந்த அரச பயணத்தை மேற்கொள்கிறார்.
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr. Mohamed Muizzu) மற்றும் அவரது பாரியார் சாஜிதா முகமது, பொலிஸ் குதிரைப்படை அணிவகுப்புடன் ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr. Mohamed Muizzu) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பமானது.
அங்கு முழுமையான அரச கௌரவத்துடன் கூடிய மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr Mohamed Muizzu) வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையையும் மாலைதீவு ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr. Mohamed Muizzu) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் கௌரவ மரியாதைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, மாலைதீவு – இலங்கை அரச பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, மாலைதீவு ஜனாதிபதி அரச தலைவர்களுக்கான விசேட நினைவுப் புத்தகத்தில் விசேட குறிப்பொன்றை இட்டு கையொப்பமிட்டார்.
மாலைதீவு அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் இர்திஷாம் ஆதம் (Iruthisham Adam), பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் வர்த்தக அமைச்சர் முகமது சயீத் (Mohamed Saeed), மீன்பிடி, விவசாயம் மற்றும் கடல்சார் வளங்கள் அமைச்சர் அஹ்மட் ஷியாம் (Ahmed Shiyam), உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அலி இஹுசான் (Ali Ihusaan), ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அப்துல்லா பயாஸ் (Abdulla Fayaz), வெளிநாட்டு உறவுகளுக்கான ஜனாதிபதியின் முதன்மைச் செயலாளர் முகமது நசீர் (Mohamed Naseer), அரசாங்கத்தின் தலைமைப் பேச்சாளர் முகமது ஹுசைன் ஷரீப் (Mohamed Hussain Shareef), இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (Masood Imad), வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மற்றும் புரோடகோல் தலைவர் முகமது ஷஹுதி (Mohamed Shahudy), ஜனாதிபதி பாரியாரின் சமூகச் செயலாளர் கதீஜா நஷ்வா (Khadeeja Nashwa), ஜனாதிபதியின் பிரதி உப செயலாளர் முகமது ஹசன் (Mohamed Hassaan) மற்றும் ஜனாதிபதி பாரியாரின் தனிப்பட்ட பணிப்பாளர் லுபாபா அலி (Lubaba Ali) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (ஐரோப்பா, வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் சட்டப் பிரிவு) எம். ஆர். கே. லெனகல மற்றும் மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் முகமது ரிஸ்வி ஹசன் (Mohamed Rizvi Hassen) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.










