செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 262 என்புத் தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதலாம் பகுதி நேற்று நிறைவடைந்தது.

12 நாள்கள் இடம்பெற்ற இந்த ஆய்வின் முடிவில், இதுவரை மொத்தம் 262 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வாய்வின் 12 ஆவது நாளான நேற்று, ஒரு புதிய என்புத் தொகுதி அடையாளம் காணப்பட்டது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொகுதிகளில் இருந்து ஐந்து என்புத் தொகுதிகள் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இதுவரை செம்மணியிலிருந்து 261 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்னும் வெளியே எடுக்கப்படாமல் உள்ளது.

இதில் சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் என்புத் தொகுதிகளும் அடங்குவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய அகழ்வின் போது என்புக் குவியல்களுக்குக் கீழே இரும்பு வளையம் எனச் சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டறியப்பட்டது. அதற்கு அடியிலும் என்புத் தொகுதிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், அப்பகுதி மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட ஆய்வின் போது இதுவரை 15 முக்கிய சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டு, நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

நாணயக் குற்றிகள், மூக்குத்தி போன்ற ஆபரணம், சிதைவடைந்த நிலையில் காப்புத் துண்டு மற்றும் சிவப்பு நிற நூல் உள்ளிட்ட பொருட்கள் 82 முதல் 97 வரையிலான இலக்கமிடப்பட்டு சான்றுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதலாம் பகுதி நேற்றோடு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மூன்று வார இடைவேளைக்குப் பிறகு, எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி இரண்டாம் பகுதி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த அகழ்வு முடிவுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles