ஐ.பி.எல். 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 58ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.
தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களைப் பெற்றது.
201 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில், திலக் வர்மா அசுர வேகத்தில் ஓட்டங்களைக் குவித்தார்.
அவர் வெறும் 33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
ரியான் ரிக்கல்டன் 23 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்து சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், சேவியர் பார்ட்லெட் வீசிய அந்த ஓவரில் வில் ஜாக்ஸ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ஒரு பந்து மீதமிருக்கையிலேயே மும்பை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபாரமாக விளையாடிய திலக் வர்மா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடர்ச்சியான 5-வது தோல்வியைச் சந்தித்துள்ளது.
