பரண் பலகை முறிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் பலி: கம்பளையில் சோகம்!

தனது வீட்டின் பரண் (பொருட்கள் வைக்கும் மரத்தட்டு) மீது தந்தை ஏறியபோது, பலகை முறிந்து கீழே விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் மீது விழுந்ததில், சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) மாலை இடம்பெற்ற இந்தச் சோகமான சம்பவத்தில், கம்பளை ஆண்டியாகடவத்தை, பீஹில்லதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் அயாத் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

மேலும், கீழே விழுந்ததில் காயமடைந்த அவனது தந்தை, கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த தந்தை, தனது மோட்டார் சைக்கிளைக் கழுவுவதற்காக அருகில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு பரண் மீது இருந்த தண்ணீர்க் குழாயை (Water Hose) எடுப்பதற்காக ஏணியின் உதவியுடன் மேலே ஏறியுள்ளார்.

அப்போது, பரணில் இருந்த மரப்பலகை எதிர்பாராதவிதமாக முறிந்து, கீழே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது அவரோடு சேர்ந்து விழுந்துள்ளது. இதில் இருவருமே காயமடைந்தனர்.

உடனடியாக இருவரும் கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த தந்தை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles