டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மூவர் உட்பட ஒன்பது பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு உடற்பரிசோதனைக்கு வந்த ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்தே இவர்கள் ஒன்பது பேரும் 11/01 நேற்று முதல் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹற்றன் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த 08 ஆம் திகதி உடற்பரிசோதனைக்கு கிளங்கன் வைத்தியசாலைக்கு வந்துள்ளார் . இவரையும் இன்னுமொறுவருமாக இருவரை 09 ஆம் திகதி கண்டி வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கண்டி மாவட்ட வைத்தியசாலையில் இவர்களுக்கு மேற்கொண்ட பி.சிஆர் பரிசோனையிலே ஹற்றன் நபருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, குறித்த நபரோடு தொடர்பை பேணிய டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் மூன்று வைத்தியர்கள், மூன்று தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் மூவருமாக ஒன்பது பேர் வைத்தியசாலையிலேயே சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ,தொற்றுக்குள்ளான ஹற்றன் நபரின் உறவினர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.