17 ஆண்டுகள் கடந்தும் ஆறா வடு: முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (மே 18), முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மக்கள் ஒன்றுகூடி, தங்களின் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 10:15 மணியளவில் தவத்திரு அகத்தியர் அடிகளாரால் ‘கொள்கைப் பிரகடனம்’ வாசிக்கப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வுகள் முறைப்படி ஆரம்பமாகின.

இதனைத் தொடர்ந்து, முற்பகல் 10:29 மணியளவில் நினைவொலி எழுப்பப்பட்டதுடன், 10:30 மணியளவில் உயிரிழந்த உறவுகளுக்காக இரண்டு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இறுதிப் போரில் தனது குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களைப் பலிகொடுத்த, வற்றாப்பளையைச் சேர்ந்த சிறீறஞ்சன் ரினோசா பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.

அதேநேரத்தில், நினைவேந்தல் முற்றத்தில் கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் ஒற்றைச் சுடர்களை ஏற்றி, மலர் தூவித் தங்களின் உறவுகளை நினைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு மற்றும் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த மக்கள், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் நின்று தங்களின் அஞ்சலிகளைச் செலுத்தினர்.

17 ஆண்டுகள் கடந்தும், தமக்கான நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்களின் தளராத உறுதியை வெளிப்படுத்தும் விதமாக இன்றைய நினைவேந்தல் நிகழ்வு அமைந்திருந்தது.

Related Articles

Latest Articles