290,000 தமிழர்களை படையினரே மீட்டனர்: இன அழிப்பு குறித்து விஜய்க்கு எதற்காக கடிதம் எழுத வேண்டும்?

“புலிகள் பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த 2 லட்சத்து 90 தமிழ் மக்களை எமது ராணுவமே மீட்டது. இன அழிப்பை நாமே தடுத்தோம். எனவே, இன அழிப்பு தொடர்பில் எந்த அடிப்படையில் தமிழக முதல்வருக்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் எழுத முடியும்”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

“ மே 18 ஆம் திகதியை தமிழினப் படுகொலை நினைவு நாளாக பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் இலங்கை கடல்வளத்தை அழிக்கும் தமிழக மீனவர்களுக்காக, அவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் என விஜய்தான் இன்று குரல் எழுப்பி வருகின்றார் என்பது கஜேந்திரகுமாருக்கு தெரியுமா? இது பற்றி வடக்கு மீனவர்கள் கூறுவது என்ன?

தமிழினப் படுகொலையை நாமே தடுத்தோம். ஏனெனில் இறுதிப் போரின்போது சுமார் 3 லட்சம்பேரை பிரபாகரன் பணயக் கைதிகளாக வைத்திருந்தார். 2 லட்சத்து 95 ஆயிரம் மக்களையும் காப்பாற்றிதான் எமது படையினர் போரை முடித்தனர்.

நாம் மக்களை மீட்கும்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எங்கிருந்தார்? 2 லட்சத்து 95 ஆயிரம்வரையான மக்களை பாதுகாத்து போரை முடித்த ராணுவம் என்ற மகிமை எமது ராணுவத்தையே சாரும்.

கனரக ஆயுதம் பயன்படுத்தவில்லை. மக்கள் நலன்கருதியே ராணுவம் முன்னோக்கி சென்றதால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்.” – என்றார் சரத் வீரசேகர.

Related Articles

Latest Articles