ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்தினாலே போதும்!

டிஜிட்டல் புரட்சி பற்றி பேசுகின்றோம் ஆனால் எமது மக்களுக்கு முகவரி இல்லை!

சிட்டுக் குருவிக்குகூட கூடு இருக்கிறது. எமது மக்களுக்கு தனி வீடு எப்போது?

ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்தினாலே போதும்!

“மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

மலையக மக்களுக்கான காணி உரிமையின் அவசியத்துவத்தை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“மலையக பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு காணி மற்றும் வீடு என்பது பிரதான பிரச்சினைகளுள் ஒன்றாக உள்ளது.

சிட்டு குருவிக்குகூட ஒரு கூடு இருக்கின்றது. ஆனால் எமது மக்களுக்கென தனி வீடு இல்லை. எனவே, வீடுகளை அமைப்பதற்காக எமது மக்களுக்கு முதலில் காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் யுகம் பற்றி பேசப்படுகின்றது. ஆனால் எமது மக்களுக்கு இன்னும் முகவரி இல்லை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேவேளை, பெருந்தோட்டக் கம்பனிகளுடனான குத்தகை ஒப்பந்தம் முடிவடைவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் உள்ளன. ஆனால் மேற்படி காலப்பகுதிக்குள் அவர்கள் பெருந்தோட்டத்துறையை அழித்துவிடுவார்களா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, பெருந்தோட்டத்துறையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். ஹட்டன் பிரகடனத்தை தேசிய மக்கள் சக்தி நடைமுறைப்படுத்தினாலேபோதும்.” எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles