“பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்”

” 2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது.
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழலால் ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தாலும், அதனை கையாள்வதற்கான ஆளுமை அரசாங்கத்திடம் உள்ளது.”

இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, இனவாதத்திற்கு இடமளிக்காமல் இருப்பது, ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவது, அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்குவது மற்றும் அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளைக் குறைப்பது ஆகியவையே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தபோது மக்கள் வழங்கிய மக்கள் ஆணையின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதற்காக அரசாங்கம் தற்போது கணிசமான பணிகளை மேற்கொண்டுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்கும் பொறுப்பு தனது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், வேறு எந்த அரசாங்கத்தின் கீழும் அது நிறைவேறாது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றைப் பார்க்காமல் அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஓய்வூதியம் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளை ரத்து செய்து, அரசியல்வாதிகளைப் பொதுமக்களுக்காக பணியாற்றுபவர்களாக மாற்றுவதற்குத் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (22) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2014 ஆம் ஆண்டு முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன. மிகவும் வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து, அதனை எதிர்கால சந்ததியினருக்குக் கையளிக்கும் நோக்கிலும், நிந்தவூர் பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாகவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகள், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பிடப்பட்ட தொகை 945.04 மில்லியன் ரூபா ஆகும். இதில் 300 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய நிதியும் தேவைக்கேற்ப ஒதுக்கப்படவுள்ளதுடன், திட்டத்தின் முழுமையான நிர்மாணப் பணிகள் 2027-12-31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

இந்த நாட்டு மக்கள் இணைந்து புதிய அரசாங்கமொன்றை உருவாக்கினார்கள். அந்த அரசாங்கத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மெலே, பேர்கர் உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் ஆதரவும் கிடைத்தது. வரலாற்றில் எந்தனை ஆட்சிகள் வந்தாலும் இந்த அரசாங்கம் சகல மக்களினதும் சகல பிரதேசங்களினதும் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும்.

நீங்கள் எம்மிடம் ஆட்சியை ஒப்படைக்க பல காரணங்கள் உள்ளன. நீண்ட காலமாக சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கிடையில் மோதல்கள், அவநம்பிக்கைகளை வளர்க்கும் இனவாத அரசியலே காணப்பட்டது. இனவாத அரசியலைத் தோற்கடிப்பதற்காக இந்த நாட்டு மக்கள் எமக்கு ஆணையை வழங்கினார்கள்.

ஒற்றுமையை கட்டியெழுப்பவே எமக்கு ஆணை வழங்கினார்கள். எமது நாட்டில் மீண்டும் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். சிங்கள,தமிழ், முஸ்லிம்,மெலே, பேர்கர் அனைவரும் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழும் நிலையை ஏற்படுத்துவோம். கடந்த காலத்தில் பல்வேறு மோதல்கள் இருந்தன. அச்சத்தோடு தான் வாழ்ந்தார்கள்.

ஆனால் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. எந்த இனவாத அச்சமும் இன்றி அனைத்துப் பிரஜைகளுக்கும் செயற்பட இடமளித்துள்ளோம். எங்காவது மோதல்கள் நடந்ததா? அச்சத்துடன் இருக்கும் நிலை உருவானதா? அந்த அரசியல் நிறைவடைந்து விட்டது. அந்த நோக்கத்திற்காகத் தான் நீங்கள் எமக்கு ஆணையை வழங்கினீர்கள்.

அடுத்து எமது நாட்டில் இலஞ்சம்,ஊழல் மற்றும் வீண் விரயத்தை ஒழிக்க மக்கள் ஆணையை வழங்கினார்கள். அரசியல் அதிகாரத்தில் இருந்து திருட்டை முழுமையாக அளித்துள்ளோம். ஆனால் செய்வதற்கு எதுவுமின்றி பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.நானும் எனது அமைச்சரவையும் எனது எம்.பிக்களும் மக்களின் ஒரு சதத்தையும் திருடவோ வீண்விரயம் செய்யவோ மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கிறோம். அவ்வாறு யாராவது இருந்தால் அவர்களுக்கு எமது அரசில் இடமில்லை. அவ்வாறான அரசாங்கத்தை தான் மக்கள் எதிர்பார்த்தார்கள். இலஞ்ச ஊழல் பெறுவோருக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டவேண்டிய தேவை இருந்தது. கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுகள் பற்றி உங்களுக்கு தெரிவித்திருக்கிறேன். அவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.

பெருமளவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. பல மோசடிக்காரர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பில் நீதிமன்றம் நியாயமாக விசாரணை நடத்தி தண்டனை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.மோசடிக்காரர்களுக்கு எதிராக தண்டனை வழங்க மக்கள் தந்த ஆணையை நாம் நிறைவேற்றுகிறோம்.

அடுத்து, சட்டம் நியாயமாக நிறைவேற்றப்பட வேண்டும். மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. சாதாரண மக்களுக்கு எதிராகவே சட்டம் செயற்படுத்தப்பட்டது. பணம் இருந்தால், அதிகாரமிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது. ஏழையாகவோ அதிகாரம் இன்றியோ இருந்தால் சட்டம் அமுல்படுத்தப்படும்.பணம் இருக்கிறதா அதிகாரம் இருக்கிறதா ஏழையா பணக்காரரா என்ற பேதமின்றி அனைவருக்கும் சமமாக சட்டம் நிறைவேற்றப்படும்.

முன்னாள் ஜனாதிபதிகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன் நிறுத்தியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளோம். இலங்கையில் ஒருபோதும் இவ்வாறு நடந்தது கிடையாது. அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். எவரும் சட்டத்தை விட உயர்வானவர்கள் கிடையாது. அவ்வாறு இருந்தால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். வளர்ச்சியடைந்த நாடுகளில் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள்.

ஆனால் சட்டத்தை அமுல்படுத்தும் போது சிலர் குழப்பமடைகிறார்கள். அந்த குழப்பத்தைப் பார்த்து நாம் எடுத்த முன்னெடுப்புகளை மாற்ற முடியாது. பஸ்களில் ஆட்களை அழைத்து வந்து வீதியில் கோசம் எழுப்பியதற்காக சட்ட நடவடிக்கைகளை மாற்ற மாட்டோம். என்னைத் தவிர வேறு யாரும் சட்டத்தை நிலைநாட்ட மாட்டார்கள்.

அரசியல்வாதிகளின் பல்வேறு சலுகைகளை நீக்கியுள்ளோம். 5 வருடங்கள் பணியாற்றிய எம்.பிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பலருக்கு இந்த சலுகை கிடைத்தது. அது தவறு என பொதுமக்கள் கூறினார்கள். அதனை நிறுத்த முடிவு செய்தோம். அதனை நிறுத்தினால் தற்கொலை செய்வதாக சொன்னார்கள். வழக்குத் தாக்கல் செய்வதாக எச்சரித்தார்கள். ஆனால் நாம் அவற்றுக்கு அஞ்சவில்லை. எம்.பிகளின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்தோம்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச செலவில் வீடு, வாகனம் என்பன வழங்கப்பட்டன. அரசாங்கத்தினால் தான் மின்கட்டணம், நீர்க்கட்டணம் என்பன செலுத்தப்படுகிறது. அவற்றை நாம் நிறுத்தினோம். சிலர் வீட்டை விட்டும் வெளியேற முடியாது என்றனர். வீட்டை விட்டும் வெளியேறினால் மக்களை திரட்டி சுற்றிவளைப்பதாகச் சொன்னார்கள். அதனை நாம் பொருட்படுத்தவில்லை. நாம் சட்டத்தை உருவாக்கி பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். அதன் பின்னர் அவர்கள் சத்தமின்றி வெளியேறினார்கள்.

வீண் விரயங்களை குறைக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களுக்கு பணியாற்றுபவர்களாக மாற்ற வேண்டும். அதனை நாம் செய்திருக்கிறோம்.

மக்களின் பொருளாதார நிலையை கட்டியெழுப்ப வேண்டும். படிப்படியாக நாம் பொருளாதாரதை மேம்படுத்தி வந்தோம். ஆனால் பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது.
டித்வா சூறாவளியினால் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பாரிய தாக்கம் ஏற்பட்டது. சுனாமியை விட பாரிய அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டது. டித்வாவுக்கு முகங்கொடுத்து மீண்டும் முன்னேறிச் செல்ல முடிவு செய்தோம்.

மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகும்போது மக்களைக் கவனித்துக் கொள்ளும் அரசாங்கம் இது. ‘டித்வா’ சூறாவளியின் போதும், மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலையின் போதும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாங்கள் பெருமளவு தொகையை ஒதுக்கினோம். நாம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளோம். ஆனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் யுத்த சூழல் தீவிரமடையத் தொடங்கியது.

எரிபொருள் இறக்குமதியின் போது டொலரின் மதிப்பு உயர்ந்தது. இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்தன. இதனால் அதிகளவிலான டொலர்கள் இன்று வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. நமக்கு டொலர் வருமானம் கிடைக்கும் சுற்றுலாத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. சில ஏற்றுமதி வருமானங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி குறிப்பிட்டளவு உயர்ந்து வருகிறது.

சிலர் இது 2022 ஆம் ஆண்டைப் போன்ற நிலை என்று கூறுகிறார்கள். ஆனால் 2022 ஐப் போல ஒருபோதும் ஆகாது. 2022 இல் நம்மிடம் ரூபாயும் இருக்கவில்லை, மத்திய வங்கியிலும் டொலர் இருக்கவில்லை. இன்று அவ்வாறான நிலைமை கிடையாது. சந்தையில் டொலர் தட்டுப்பாடு நிலவினாலும், மத்திய வங்கியில் கிட்டத்தட்ட 7,000 மில்லியன் டொலர் கையிருப்பு உள்ளது. அன்று மத்திய வங்கியில் வெறும் 50 மில்லியன் டொலர்களே இருந்தது. இன்னும் சில தினங்களில் நமக்கு மேலும் 700 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளன. அப்போது கணிசமான டொலர் இருப்பு நம்மிடம் இருக்கும்.

இருப்பினும், நாம் நாட்டின் பொருளாதாரத்தை முறையாகக் கையாள வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், எரிவாயு , பால்மா, உரங்கள் ஆகியவற்றில் எந்தவொரு தட்டுப்பாடும் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அன்று எரிபொருள் இல்லாமல் போனது, பால்மா இல்லாமல் போனது, எரிவாயு இல்லாமல் போனது, உரங்கள் முற்றாக இல்லாமல் போயின.

அத்தகையதொரு நிலைமை மீண்டும் ஏற்படாது. ஆனால் நமக்கு ஓரளவுக்கு அழுத்தம் உள்ளது. அதை நாம் முகாமைத்துவம் செய்ய வேண்டும். நாட்டின் உட்புறத்தில் பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டோம். டித்வா சூறாவளியை எதிர்கொண்டோம். அது ஒரு உள்ளகப் பிரச்சினை. ஆனால், இது நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழ்நிலையினால் ஏற்பட்டது. இதையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.

இப்போது பலர் இந்த நிலைமை 2022 ஐப் போன்றதுதான், கோட்டாபயவிற்கு நடந்ததேதான் இவருக்கும் நடக்கும் என்று ஒரு கருத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். அப்படி எதுவும் நடக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் இப்பிரச்சினையைத் தீர்ப்போம். நாம் ரூபாய்களை ஈட்டியுள்ளோம். அதனால்தான் இன்று இப்பிரதேசத்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்க, இந்த கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக நிதியை ஒதுக்கீடு செய்ய நமக்கு முடிந்தது” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles