என்பிபி அரசு மக்களை ஏமாற்றுகிறது!

“நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை. தற்போதைய அரசே தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றது. நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி, இந்த அரசு தாங்கள் நினைத்ததையெல்லாம் தன்னிச்சையாகச் செய்து வருகின்றது.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றின் அரசியல் விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் மீதும், அதன் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் கருத்துக்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபை தேர்தல் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், அரச தரப்பினர் மக்களை நேரில் சந்திக்கத் தயாராக இல்லை என்பது மிகத் தெளிவாகப் புரிகின்றது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் பிரதான வடிவமாகவே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. தற்போது மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தேசிய மக்கள் சக்தியின் தலைமைக் கட்சியான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைத் தேர்தல் குறித்து இந்தத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளுக்கு முற்றிலும் முரணான கருத்துக்களைப் பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றார். இது ஒட்டுமொத்த மக்களை ஏமாற்றும் மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அப்பட்டமாக அவமதிக்கும் ஒரு செயலாகும்.

தேசிய மக்கள் சக்தி என்பது அடிப்படையில் ஒரு கம்யூனிசக் கட்சியாகும், அது ஒரு ஜனநாயகக் கட்சி அல்ல. அவர்களின் கட்சி கட்டமைப்பு முறைமையின்படி, நாட்டின் பிரதமரையோ அல்லது ஜனாதிபதியையோ விடக் கட்சியின் தலைமைக் கட்சியான பொதுச்செயலாளருக்கே உச்சக்கட்ட அதிகாரங்கள் உள்ளன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சமீபத்தில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காகவே, மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ரில்வின் சில்வா கூறியுள்ளார். இதில் கடுமையான சட்டச் சிக்கல் காணப்படுகின்றது.

அரசமைப்பின்படி, நாட்டின் நிதி தொடர்பான முழுமையான மற்றும் இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உரியதாகும். நாடாளுமன்றத்துக்குள் உரிய நிதிப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்து, விவாதித்து அனுமதி பெற்றே ஒரு நிதி ஒதுக்கீட்டை மற்றுமொரு தேவைக்கு மாற்றியமைக்க முடியும். அதற்கு மாறாக, அரசோ அல்லது கட்சியின் பொதுச்செயலாளரோ தன்னிச்சையாக எந்தவொரு நிதியையும் மாற்றியமைக்க முடியாது. இது குறித்து நாடாளுமன்ற நிதி பற்றிய குழு ஊடாக தற்போது விரிவான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், தற்போதைய நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருப்பதால், இவ்வாறான சட்டவிரோதக் கருத்துக்களுக்கு அல்லது தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராகத் தண்டிப்பு நடவடிக்கைகளை எடுப்பது சாத்தியமற்றதாக உள்ளது. ஆனால், இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களைச் சமூகத்தில் கூறாது இருக்குமாறு அவர்களுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக அறிவுறுத்த முடியும்.

தற்போது மாகாண சபைத் தேர்தல் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உத்தியோகபூர்வ கால எல்லை நிறைவடையவுள்ளது. இருப்பினும், தேர்தல் நடத்துவது குறித்து அரசின் இழுபறி நிலை காரணமாக உரிய இறுதித் தீர்மானம் இன்னமும் எட்டப்படவில்லை. ஆகவே, இந்தத் தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் நீடிப்பதற்குத் தேவையான நாடாளுமன்ற நடவடிக்கைகள் எம்மால் முன்னெடுக்கப்படும்.” – என்று மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles