22 வயது யுவதி படுகொலை செய்யப்பட்டு புதைப்பு!

கண்டி, தெல்தெனிய, ரங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடிஸ்பத்துவ – ஹக்மன பிரதேசத்தில் 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சடலம் நீதிவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

ரங்கல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் பேரில், ரங்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த ஜயரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இந்தச் சடலத்தை நேற்று மீட்டுள்ளனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருந்த பெண், உடிஸ்பத்துவ – ஹக்மன பகுதியைச் சேர்ந்த வீரசேகர முதியான்சேலாகே ஹீன்பிட்டகெதர வாசனா சந்தமாலி (வயது 22) என்ற யுவதி என ரங்கல பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தெல்தெனிய நீதிவான் கமல் சஞ்சய ஜயதிலக சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சடலம் தொடர்பான மேலதிக பிரேதப் பரிசோதனைகளைத் தெல்தெனிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உபுலி பண்டார ஊடாக மேற்கொண்டு, அது குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ரங்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ரங்கல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Latest Articles