தெற்கு டெல்லி மாள்வியா நகரில் உள்ள ஓர் உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலர் வெளிநாட்டவர் என்று தெரியவந்துள்ளது.
இன்று காலை 9 மணியளவில் தெற்கு டெல்லி தீயணைப்புத் துறைக்கு, மாள்வியா நகரில் உள்ள பிரபலமான ‘லெமன் க்ரீன்’ என்ற உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. நிலைமையின் தீவிரத்தை அறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன.
தீ விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக தகவல். பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலர் வெளிநாட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையை டெல்லி போலீஸ் உறுதி செய்துள்ளது.
டெல்லி தீயணைப்புத் துறை அளித்த ஊடகப் பேட்டியில், “டெல்லி மாள்வியா நகர் லெமன் க்ரீன் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த தகவல் வந்ததும், தீயணைப்பு வாகனங்கள் உள்பட பல நவீன இயந்திரங்களை நாங்கள் அனுப்பிவைத்தோம்.
உணவகத்தின் அடித்தளத்தில் சிக்கியிருந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம் என்று முதற்கட்ட தகவல்களைப் பகிர்ந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாவில்லை. மின்சார கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, டெல்லி தீ விபத்து மிகுந்த வேதனையை தருவதாகவும், விபத்து தொடர்பான விசாரணைகளை முடுக்கிவிட்டதோடு, நிலைமைய கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கடினமான காலத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோரின் குடும்பங்களுடன் நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணங்களை உடனடியாக ஏற்படுத்தித் தரவும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தீ விபத்தின்போது கட்டிடத்தின் மேல் தளத்தில் 2 பெண்கள் குதித்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாக காண்போரை பதற வைக்கிறது.










