மாகாண சபை விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் இழுப்பது சரியல்ல!

மாகாண சபைத் தேர்தல் அல்லது இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை விவகாரங்களில் இந்தியாவை மீண்டும் இழுத்து உள்ளே விடுவது எமக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி, எவ்வித நன்மையையும் பயக்காது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கை இணைத்து, இந்தியாவால் பெற்றுத்தர முடிந்த மாகாண சபை முறையை முதற்கட்ட தீர்வாகப் பெற்று, தம்மைத் திடப்படுத்திக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வரலாறு தந்த வாய்ப்பைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தவறவிட்டுவிட்டன என்றும், அதனால் இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வரலாறு நம்மைக்கொண்டு வந்து விட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கில நாளேடு ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-

“இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு உள்ளது என்பது உண்மைதான். அந்தப் பொறுப்பு உருவாவதற்குக் காரணம், இலங்கையில் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைச் செயலிழக்கச் செய்வதில் இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளும், இராணுவத் தலையீடும் தீர்மானகரமான பங்கை வகித்தமையே ஆகும். அந்தச் செயல்முறையில் இந்தியா சுமார் இரண்டாயிரம் இராணுவ வீரர்களை இழந்தது. இதற்கு முன்னோடியாக, தமிழ் ஆயுத இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சி பெற்ற காலகட்டமும் இருந்தது. அதன் விளைவாக, இந்தியத் தொடர்பு என்பது இலங்கையின் சிங்களவர், தமிழர் ஆகிய இரு தரப்புக்குமே உணர்வுபூர்வமான ஒரு விடயமாக மாறியது.

எனினும், இன்று மாறிவிட்ட புதிய உலக ஒழுங்குச் சூழ்நிலையில், இந்தியாவை மீண்டும் இந்த விவகாரத்துக்குள் இழுத்து வரக் கூடாது என்ற நிலைப்பாட்டில்தான் நான் இருக்கின்றேன். இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடும் இதுதான் என நான் திடமாக நம்புகின்றேன். இந்திய அரசு, இனிமேல் இலங்கைத் தமிழர் தரப்பின் பங்காளியாக, இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டுச் செயற்படாது என்பது எனக்கு நன்கு விளங்குகின்றது.

அண்மைக்காலங்களில், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்தியப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சமீபத்தில் இந்திய உப ஜனாதிபதி உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்களை நாம் சந்தித்த போதெல்லாம், 13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபைகள் தொடர்பான விடயங்கள் எமது நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை.

13ஆவது திருத்தச் சட்டம் என்பது இலங்கையின் அரசமைப்பின் ஒரு பகுதியாகும். எனவே, அதனைத் தக்கவைத்துக் கொள்வதா, மேம்படுத்துவதா, முழுமையாக நடைமுறைப்படுத்துவதா, சீர்திருத்துவதா அல்லது முற்றிலும் நீக்குவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது ஒட்டுமொத்த இலங்கையர்களின் பொறுப்பாகும். இந்த விவகாரத்திலிருந்து இந்தியாவைத் தூரத்தில் வைத்திருப்பது இந்தியாவுக்கும் நன்மை பயக்கும். குறிப்பாக, புதிய உலக ஒழுங்குச் சூழலில், இந்தியா ஒரு தமிழர் ஆதரவு நாடாக அல்லாமல், இலங்கையை முழுமையாக ஆதரிக்கும் ஒரு நாடாகவே சர்வதேசத்தால் பார்க்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவுடனான தங்களது உறவைச் சரியான முறையிலும், சரியான நேரத்திலும் பயன்படுத்தத் தவறிவிட்டன. இலங்கை அரசின் மீது இந்தியா கொண்டிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, இணக்கமான அரசியல் தீர்வை முன்னெடுக்க அவர்கள் போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை. அதேபோல், மாகாண சபை அமைப்பைப் பயன்படுத்தித் தங்களது நிலையை முதலில் வலுப்படுத்திக் கொண்டு, பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவும், இந்தியாவின் நம்பிக்கையைப் பெறவும் அவர்கள் திறம்படச் செயல்படவில்லை.

மாகாண சபையை நிர்வாக மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வுத் தளமாகப் பயன்படுத்தாமல், வெறுமனே கட்சி அரசியல் தளமாகப் பயன்படுத்தி, தங்களுக்குள் அடிபட்டு மோதி, அது ஒரு பயனற்ற அமைப்பு என்ற கருத்து மக்கள் மத்தியில் ஏற்படக் காரணமாகிவிட்டார்கள். அதன் விளைவாக, மாகாண சபை விவகாரத்தில் நாம் மீண்டும் தொடக்க நிலைக்கே திரும்பிவிட்டோம்.

ஆகவே, இந்த விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் இழுத்து வர முடியாது. வரவும் கூடாது. தீர்வு இலங்கைக்குள், இலங்கையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, இலங்கையர்களாலேயே இறுதி செய்யப்பட வேண்டும். இந்தியாவுடன் பரஸ்பர நன்மை தரும் பொருளாதார இணைப்புகளைத்தான் நாம் மேலும் ஆழப்படுத்த வேண்டுமே தவிர, அரசியல் தீர்வுகளுக்காக அவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது.” – என்றார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles