‘1990 சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை!
– சமூக ஊடக வதந்திகளைத் திட்டவட்டமாக நிராகரித்தது நிர்வாகம்
நாடளாவிய ரீதியில் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘1990 சுவசெரிய’ அவசர அம்புலன்ஸ் சேவை முடக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அதன் நிர்வாகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதுடன், இச்சேவைகள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாகச் சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினரால் விசேட உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இத்தகைய பதிவுகள் “முற்றிலும் பொய்யானவை” எனவும், இவை பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்குடன் திட்டமிட்டுப் பரப்பப்படுபவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், ‘சுவசெரிய’ அவசர அம்புலன்ஸ் சேவையானது நாடு தழுவிய ரீதியில் முழுமையான தொழிற்பாட்டுடன் இயங்கி வருவதாகவும், வழமையான முறையை விடவும் கூடுதல் வினைத்திறனுடன் பொதுமக்களுக்கான அவசர சேவைகளை அது வழங்கி வருகின்றது என்றும் பணிப்பாளர் சபை தெளிவுபடுத்தியுள்ளது.
எதிர்காலத்திலும் இந்த அவசர அம்புலன்ஸ் சேவையானது எவ்வித இடையூறுகளுமின்றி, தொடர்ச்சியாகத் தனது பணியை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் என்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிர்வாகம் மேலும் உறுதியளித்துள்ளது.










