தோல்விப் பயத்தாலேயே மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்துகின்றது அரசு!

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளால் அச்சமடைந்துள்ள தற்போதைய அரசு, மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

‘மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் கோழைத்தனமான அநுரவின் வெறியாட்டத்தை தோற்கடிப்போம்’ என்ற கருப்பொருளில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இன்று நாட்டில் மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சப்படும் ஜனாதிபதியும், கோழைத்தனமான, வினைத்திறனற்ற அரசுமே ஆட்சியில் உள்ளது. ஆட்சிக்கு வந்த மிகக் குறுகிய காலத்துக்குள் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தற்போதைய அரசு சுமார் 23 இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் மேலும் பல இலட்சம் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற பயத்தினாலேயே அரசு தேர்தலை ஒத்திவைத்து வருகின்றது. மக்கள் படும் துயரம், அழுத்தம் மற்றும் வலிகளுக்குத் தேர்தலில் வாக்குகள் மூலம் தக்க பாடம் புகட்டத் தயாராகவே உள்ளனர்.

நாட்டு மக்கள் இப்போதாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். எந்தவொரு தரப்புக்கும் அறுதிப் பெரும்பான்மையோ அல்லது அபரிமிதமான அதிகாரத்தையோ வழங்கக் கூடாது. அவ்வாறு அதிகாரம் கிடைத்தால், அவர்கள் அதிகார மமதையால் நாட்டைச் சீரழித்து, தன்னிச்சையான முடிவுகளை எடுக்கும் தவறான ஆளுகை முறையை உருவாக்கி விடுவார்கள். நாட்டின் ஒரே மாற்றாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் சாதாரண பெரும்பான்மையே போதுமானது, எமக்கும் அபரிமிதமான அதிகாரம் தேவையில்லை.

மக்களின் கஷ்டங்களை விற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இன்று மக்களின் துயரங்களை மறந்துவிட்டுச் சுகபோகங்களை அனுபவித்து வருகின்றது. உலகச் சந்தையில் விலைகள் குறைந்த போதும், மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்கவோ அல்லது துறைமுக இறக்குமதி விலையில் எரிபொருளை மக்களுக்கு வழங்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. உலக நாடுகள் எரிபொருள் வரிகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது, இங்கு தலைகீழான நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன.

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியால் ‘தேசிய நடவடிக்கைக் குழு’ ஒன்று ஸ்தாபிக்கப்படும். இதில் பதவி, தராதரங்கள் இன்றி அனைவரும் உள்வாங்கப்பட்டு, மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். மாகாண சபைகள் பயனற்றவை என்று கூறுபவர்களுக்கு அரசியல் நுட்பம் தெரியாது. மாகாண சபைகள் முறையாக இயங்கினால் சர்வதேச முதலீடுகளைக் கூட ஈர்த்துப் பெரும் சேவையாற்ற முடியும்.

நாட்டின் இறையாண்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாத்து, அனைத்துச் சமூகங்களுக்கும் உன்னத ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் அதிகாரப் பகிர்வுக்கு மாகாண சபைகளே வழியமைத்தன. நாம் ’13 பிளஸ்’ (13+) அல்லது ’13 மைனஸ்’ (13-) என்று இரட்டை வேடம் போடமாட்டோம். சில அரசியல்வாதிகள் சர்வதேசத்துக்குச் சென்று ஒரு கதையையும், உள்நாட்டில் வேறு கதையையும் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அதில் உள்ளவாறே முழுமையாக நடைமுறைப்படுத்தத் தயாராக உள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles