மலையகத்தில் சித்த மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த கோரிக்கை – நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் கையளிப்பு
தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ மரபுகளில் முக்கிய இடம்பிடித்துள்ள சித்த மருத்துவம் உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்தையும் வரவேற்பையும் பெற்று வரும் நிலையில், மலையகப் பகுதிகளில் சித்த மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு பரிந்துரைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் இணைப்பாளர் வர்ணகுலசிங்கம் பிரவீன், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரிடம் குறித்த மகஜரை கையளித்தார்.
சித்த மருத்துவம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்களால் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய மருத்துவ முறையாகும்.
பல்வேறு நீண்டகால மற்றும் தொற்றாநோய்களுக்கு சிகிச்சையளிக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படும் இந்த மருத்துவ முறை, தற்போது இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும், சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பாக அரசாங்க மட்டத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், இந்தத் துறையில் கல்வி கற்கும் மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழில் வாய்ப்புகள் குறைவு, பயிற்சி வசதிகளின் பற்றாக்குறை மற்றும் சேவை விரிவாக்கமின்மை போன்ற காரணங்களால் மாணவர்களிடையே தயக்க நிலையும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகஜரில், நாட்டில் காணப்படும் மருத்துவ மூலிகை வளங்களைப் பயன்படுத்தி சித்த மருத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும், மூலிகை சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை மற்றும் மருந்து இறக்குமதி செலவினங்களை குறைப்பதற்கும் சித்த மருத்துவத்தின் பங்களிப்பு முக்கியமானதாக அமையும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நுவரெலியா, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளகப் பயிற்சி சித்த மருத்துவர்கள் தங்களது சொந்த பிரதேசங்களிலேயே அறுவை மருத்துவம், பொது மருத்துவம், காது–மூக்கு–தொண்டை மருத்துவம், குழந்தை மருத்துவம் மற்றும் மகளிர் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சேவையாற்றுவதற்கான ஒழுங்குமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள சித்த மருத்துவ வசதிகளை மலையகப் பகுதிகளிலும் பரவலாக்கி மக்களுக்கு அணுகக்கூடிய சேவையாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலைநாட்டுப் பகுதிகளில் இயற்கையாக வளரும் மருத்துவ மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டு சித்த மருந்து உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கும், அவற்றை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அதேவேளை, நீரிழிவு உள்ளிட்ட தொற்றாநோய்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் சித்த மருத்துவ அடிப்படையிலான தொற்றாநோய் சிகிச்சைப் பிரிவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மகஜரில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மலையக மக்களுக்கு பாரம்பரிய மருத்துவ சேவைகளை நெருக்கமாக கொண்டு செல்வதற்கும், சித்த மருத்துவத் துறையில் கல்வி கற்கும் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்தக் கோரிக்கைகள் உதவும் என அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்து, எதிர்காலத்தில் நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.










