ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புக்காக, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியவின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன் ஏனைய உறுப்பினர்களாக,
I. ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ
II. நிதி மற்றும் நிறுவன மூலோபாய நிபுணர் தேஷால் த மெல்
III. பரிவர்த்தனை மற்றும் முதலீட்டு வங்கியியல், ஒன்றிணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நிபுணர் துமித் பெர்னாண்டோ மற்றும்
IV. நிதி அமைச்சின் செயலாளர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவர்,
V. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் / சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் பிரதிநிதி ஒருவர் அல்லது பிரதிநிதிகள்
VI. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர்
VII. நிறுவனம், விமான சேவைகள், பொதுச் சட்டம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சட்ட நிபுணர்கள்,
VIII. விமான சேவைகள் தொழிற்துறை நிபுணர்கள்
ஆகியோர் நியமிக்கப்படுவர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பாக, பரந்த பேரினப் பொருளாதார சூழலின் முன்னோக்குகளைக் கருத்திற் கொண்டு, விரிவான மூலோபாய மீளாய்வை மேற்கொள்வது அவசர முன்னுரிமையாகும் என அரசாங்கம் கண்டறிந்துள்ளது.
இந்த மீளாய்வின் முக்கிய நோக்கம், அரசாங்கத்தின் மீதான நீண்டகால நிதிச் சுமையைக் குறைத்து, நிதி ரீதியாக நிலைபேறான மற்றும் வணிக ரீதியாக செயற்திறனான தேசிய விமான சேவையை நிறுவுவதாகும்.
அதன்படி, பரிவர்த்தனை ஆலோசகராக (Transaction Advisor) செயற்படும் சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்துடன் (International Finance Corporation – IFC) இணைந்து செயற்படுவதற்காக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புக்கான குழுவொன்றை அமைப்பது மிகவும் பொருத்தமானது என கண்டறியப்பட்டுள்ளது.
I. மூலோபாய கண்ணோட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த சுயாதீனமான மீளாய்வு மற்றும் மதிப்பீட்டைச் செய்தல்,
II. மறுசீரமைப்புத் தேவைகள் மற்றும் மாற்று மறுசீரமைப்பு மாதிரிகள் குறித்த பரிந்துரைகளை வழங்குதல்,
III. குறிப்பிட்ட மூலோபாய தெரிவுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நோக்கங்களுடன் ஒத்துப்போகக்கூடிய மிகவும் பொருத்தமான வழிமுறைகள் குறித்து பரிந்துரைத்தல்,
IV. இலங்கை அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூலோபாயங்கள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைக்கான மேற்பார்வை, வழிகாட்டல்கள் மற்றும் ஆதரவை வழங்குதல் ஆகிய பணிகள் இக்குழுவிற்கு ஒப்படைக்கப்படவுள்ளன.
மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பு செயல்முறை நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் அல்லது இலங்கை அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்படும் வரை இக்குழு செயல்படவுள்ளது.










