செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 14 எலும்புக்கூடுகள் மீட்பு: இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாகப் பதிவு!
செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது புதிதாக 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதற்கமைய செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் அதிக எண்ணிக்கையான என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி இன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 27ஆம் நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.
இன்றைய அகழ்வின் போது புதிதாக சிறுவர்களின் மூன்று என்புத் தொகுதிகள் உட்பட 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளது.
மேலும் குழந்தை ஒன்றினது என்புத் தொகுதியும் சிறுவர் ஒருவரினுடைய என்புத் தொகுதியும் உட்பட மொத்தமாக 5 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் இதுவரை மொத்தமாக 380 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 362 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இதுவரை 17 மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக 2018ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் சதொச மனித புதைகுழி காணப்படுகின்றது.
அங்கு 28 சிறுவர்களின் என்புத் தொகுதிகள் உட்பட 376 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
மூன்றாவது பெரிய புதைகுழியாக 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மாத்தளை மனிதபுதைகுழி காணப்படுகின்றது. இங்கு 155 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வின் 9 நாட்களும், இரண்டாம் கட்ட அகழ்வின் 45 நாட்களும், மூன்றாம் கட்ட அகழ்வின் 27நாட்களும் என மொத்தமாக இதுவரை 81நாட்கள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.










