மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், அதனைச் சாதகமாக்கிக் கொள்வதற்குக் குறிப்பிட்ட காலவரைமுறைக்குள் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் காணி உரிமைக்காகப் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன.
பல அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் இது தொடர்பாகத் தெளிவூட்டல்களையும், தொடர் கலந்துரையாடல்களையும் நடத்தி வருவதால், இவ்விடயம் அடிமட்ட மக்கள் வரை சென்றடைவதற்குக் காரணியாக அமைந்துள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையில், தேசிய அரசியல் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மலையக மக்களின் காணி உரிமை குறித்துக் கரிசனை காட்டினாலும், ஆட்சி அமைத்த பின்னர் இவ்விடயத்தில் மௌனம் காப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளன.
எனவே, மலையகச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருக்காமல், காணி உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான புதியதொரு திட்டத்துடனும் காத்திரமான வேலைத்திட்டங்களுடனும் ஒன்றிணைய வேண்டும்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் அரசுக்குச் சொந்தமான காடுகளைக் குத்தகைக்குப் பெற்றிருந்தாலும், அவை தங்களைப் பெருந்தோட்ட நிலங்களின் உரிமையாளர்களைப் போலவே நடத்துகின்றன. அரசாங்கம்கூட அந்த நிறுவனங்களை மீறிச் செயற்பட முடியாத ஒரு யதார்த்த நிலையே காணப்படுகிறது.
மலையக மக்கள் காணி உரிமையைப் பெற்றுக்கொள்ள எவ்வளவு தூரம் முனைப்புடன் செயற்படுகிறார்களோ, அதே அளவிற்கு நிலங்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கும் குத்தகை காலத்தை நீடித்துக் கொள்வதற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.
எனவே, காணி உரிமை என்பது வெறும் கோஷமாக மட்டுமே இருக்காமல், அதனைச் செயற்பாட்டு வடிவிற்கு மாற்ற வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. மலையக மக்களுக்கான காணி உரிமையைத் தடுப்பதற்கு வெளிப்படையாக யாரும் செயற்படாதது போல் தோன்றினாலும், திரைமறைவில் மக்களின் இந்த எழுச்சியைத் தடுத்து நிறுத்துவதற்குப் பல்வேறு மறைமுகச் சக்திகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.
மலையக மக்களின் காணி உரிமைக் கனவு நனவாக வேண்டுமானால், ஒட்டுமொத்த சமூகமும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து, உரிமை பெற்றுக் கொடுக்கும் ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைய வேண்டும். மக்களின் ஒற்றுமையால் ஏற்படும் எழுச்சி, நிச்சயமாகக் காணி உரிமையைப் பெற்றுத் தரும்.
இதற்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மத நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக நல அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு கால எல்லையை நிர்ணயித்துச் செயற்பட வேண்டும். இதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு இதுவே சரியான தருணமாகும் என கணபதி கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.










