சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி: தாமரைப் பூ பறிக்க சென்றவேளை சோகம்!

புத்தளம், வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காக தெப்பம் தெப்பத்தில் பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி கற்று வந்த, பண்டாரநாயக்கபுர மற்றும் மங்களபுர ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 16 வயதுடைய நான்கு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

மாணவர்கள் ஐவர் நேற்று பிற்பகல் மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் சிறிய தோணியொன்றில் (தெப்பத்தில் )சென்றுள்ளனர்.

இதன்போது, எதிர்பாராதவிதமாக தோணி நிலைதடுமாறி ஏரியின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தோணி கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்களும் நீரில் மூழ்கிய நிலையில், அவர்களில் ஒரு மாணவர் மாத்திரம் பிரதேச மக்களால் உடனடியாக உயிருடன் மீட்கப்பட்டார். ஏனைய நான்கு மாணவர்களும் கடுமையான போராட்டத்துக்குப் மத்தியிலேயே நீரிலிருந்து மீட்கப்பட்டனர்.

அவர்கள் உடனடியாக வனாத்தவில்லுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், நிலைமை மிக மோசமாக இருந்தமையால் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரே பாடசாலையைச் சேர்ந்த 4 மாணவர்கள் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் வனாத்தவில்லுவ பிரதேசத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் வனாத்தவில்லுவபண்டாரநாயக்கபுர தேசிய பாடசாலையில் 11-D பிரிவில் கல்வி கற்று வந்த சலிச கவிஷான், சேதன விஷ்மித, திலேன் மிஹிரங்க மற்றும் தேஷான் புத்திக ஆகிய நான்கு மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் நால்வரும் 2026ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்குத் தோற்றவிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles