சாபத்தை வென்ற மெக்சிகோவின் சரித்திர வெற்றி

உலகக் கோப்பையில் மெக்சிகோ அணியின் அசாத்தியமான ஆட்டமும் அசுரவேகப் பயணமும் தொடர்கிறது.

பயிற்சியாளர் ஜாவியர் அகுய்ரேவின் (Javier Aguirre) வழிகாட்டுதலில் களம் கண்டுள்ள மெக்சிகோ அணி, ஈக்வடாரை 2-0 என்ற கோல் கணக்கில் முழுமையாகத் தவிடுபொடியாக்கி, உலகக் கோப்பையின் 16-ஆவது சுற்றுக்கு (Round of 16) கம்பீரமாகத் தகுதி பெற்றுள்ளது.

மோசமான வானிலை காரணமாக மெக்சிகோ சிட்டி மைதானத்தில் ஆட்டம் தொடங்குவதில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

எனினும், ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே போட்டியை நடத்தும் மெக்சிகோ அணி, கட்டுக்கடங்காத வெறியோடு ஈக்வடார் அணியின் தற்காப்பு அரணை நோக்கித் பாய்ந்தது.

ஆட்டத்தின் முதல் 15 நிமிடங்களிலேயே கில்பர்டோ மோரா, லூயிஸ் ரோமோ மற்றும் ரவுல் ஜிமினெஸ் ஆகியோர் கோல் அடிப்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கினர்.

மறுபுறம், ஆட்டத்தின் 18-ஆவது நிமிடத்தில் ஈக்வடாரின் ஜான் யெபோவா அடித்த பந்து கோல் போஸ்ட்டின் வெளிப்பகுதியில் பட்டுத் தெறித்தது.

22-ஆவது நிமிடம் (முதல் கோல்): ரொபர்ட்டோ ஆல்வராடோ கொடுத்த அற்புதமான பாஸைப் பெற்று, மின்னல் வேகத்தில் பாய்ந்த ஜூலியன் குய்னோனஸ் (Julian Quinones) பெனால்டி பகுதிக்குள் இருந்து அடித்த இடி போன்ற ஷாட், ஈக்வடார் கோல்கீப்பர் ஹெர்னான் கலின்டெஸை நிலைகுலையச் செய்து வலையைக் கிழித்துக் கொண்டு உள்ளே சென்றது.

30-ஆவது நிமிடம் (இரண்டாவது கோல்): முதல் கோல் கொடுத்த உற்சாகத்தில் மைதானமே அதிரத் தொடங்கிய வேளையில், ஆட்டத்தின் அரை மணி நேரத்தைக் கடந்ததும் குய்னோனஸ் கொடுத்த பந்தைக் கொண்டு நட்சத்திர வீரர் ரவுல் ஜிமினெஸ் மெக்சிகோவின் இரண்டாவது கோலை அடித்து முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

உலகக் கோப்பை வரலாற்றில் தென் அமெரிக்க அணிகளுக்கு எதிராக மெக்சிகோ விளையாடிய முந்தைய 14 போட்டிகளில் பெற்ற ஒரே ஒரு வெற்றி ஈக்வடார் அணிக்கு எதிரானது மட்டுமே ஆகும்.

சுவாரசியமாக, கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்தப் போட்டியிலும் இதே ஜாவியர் அகுய்ரேதான் மெக்சிகோ அணியின் பயிற்சியாளராக இருந்தார். தற்போது 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரது தலைமையிலேயே ஈக்வடாரை வீழ்த்தி மெக்சிகோ வரலாறு படைத்துள்ளது.

மெக்சிகோ அணியின் இந்த வெற்றிக்கு அதன் பலமான தற்காப்பு அரணே முக்கியக் காரணமாகும். சீசர் மான்டெஸ் மற்றும் ஜோஹான் வாஸ்குவெஸ் ஆகியோரின் அசாத்திய ஜோடி எதிரணியினரை ஒரு இன்ச் கூட நகரவிடாமல் தடுத்தது.

கோல்கீப்பர் ரவுல் ரங்கல் (Raul Rangel) தொடர்ந்து 4-ஆவது போட்டியாக ஒரு கோல் கூட வாங்காமல் அசைக்க முடியாத சுவராக நின்று சாதித்துள்ளார்.

தொடர் வெற்றிகளால் உச்சகட்ட உற்சாகத்தில் இருக்கும் மெக்சிகோ அணி, வரும் ஜூலை 5 அன்று மீண்டும் மெக்சிகோ சிட்டி மைதானத்தில் களம் இறங்கவுள்ளது.

அங்கு நடைபெறவுள்ள 16-ஆவது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அல்லது காங்கோ குடியரசு (Congo DR) ஆகிய இரு அணிகளில் ‘சுற்று-32’ இல் வெற்றி பெறும் அணியை மெக்சிகோ எதிர்கொள்ளவுள்ளது.

40 ஆண்டு கால சாதனை – மெக்சிகோ அணி இதற்கு முன்பு 1986 ஆம் ஆண்டு தங்களது சொந்த நாட்டில் உலகக் கோப்பையை நடத்திய போதுதான் நாகவுட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு இப்போதுதான் நாகவுட் போட்டியில் வென்றுள்ளது.

இதன் மூலம், கடந்த 40 ஆண்டுகளாக உலகக் கோப்பை (Knockout) சுற்றுகளில் மெக்சிகோவிற்கு இருந்து வந்த தொடர் தோல்விச் சாபம் முடிவுக்கு வந்துள்ளது.

 

Related Articles

Latest Articles