” இன்று விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். அதற்கு இந்த அரசாங்கமே காரணம்!. இது போதாதென்று, விவசாயிகளின் தலைமுறையினரையும் மிகக் கேவலமாக பேசி இந்த அரசாங்கம் அவர்களை ஏளனப்படுத்தியும் வருகிறது.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம் விவசாயிகளுக்கு இழைத்து வரும் அவமதிப்புகளுக்கு தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இன்று (02) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
” பல பிரச்சினைகளுக்கு மத்தியில் விவசாயம் செய்யும் விவசாயியை வளப்படுத்தி, ‘விவசாயியை அரசனாக்குவோம்’ என்று கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இன்று விவசாயிகளை நரகத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை அதிவேகமாக முன்னெடுத்து வருகின்றது.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு இவர்களிடம் எந்த தீர்வும் இல்லை. விவசாயிகளை இழிவுபடுத்தி, ஏளனம் பேசி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சமூக ஒடுக்குமுறைக்கும், மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களுக்கும் எதிராகவே மக்கள் விடுதலை முன்னணி (JVP) உருவானது.
ஆனால், இன்று ‘சேற்றைக் கழுவினால் விவசாயி அரச பதவிக்கு தகுதியாவது பிறப்பின் அடிப்படையில்தான்’ என்று மக்கள் விடுதலை முன்னணி கூறுவது அவர்களின் மேல்தட்டு வர்க்க சார்பற்ற (நிர்பிரபுத்துவ) அரசியலினால்தானா? என நான் கேள்வி எழுப்புகிறேன்.
இத்தகைய முட்டாள்தனமான பேச்சுக்களை பேசுபவர்கள், உடனடியாக அவற்றை நிறுத்திக்கொள்ளுமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயிகளைக் ‘கசிப்பு வியாபாரிகள்’ என்றும் ‘செயற்கை விவசாயிகள்’ என்றும் அவமதித்துவிட்டு, இப்போது விவசாயிகளின் பிறப்பைப் பற்றிப் பேசி அவர்களை பரிகாசத்திற்குட்படுத்தி வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் 159 பெரும்பான்மை பலம், ஜனாதிபதி பதவி மற்றும் பல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பெற்ற பின்னரே இவர்கள் விவசாயிகளை இவ்வாறு அவமதிக்கத் தொடங்கியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.










