நாட்டில் கடந்த ஜனவர முதல் ஜுலை 03 ஆம் திகதிவரை டெங்கு நோயால் 58 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று மாத்திரம் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நாளாந்தம் ஆயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர்.
அதேவேளை, மேல் மாகாணத்தில் அதிக அபாயமிக்க பகுதிகளை மையப்படுத்திய விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அ ஜனாதிபதியின் விசேட பணிப்புரைகளுக்கு அமைவாகவும், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) நேரடி மேற்பார்வையின் கீழும் இன்று (04 ஜூலை) காலை ஆரம்பிக்கப்பட்டது.
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தி பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த பாரிய பொதுச் சுகாதார வேலைத்திட்டம் மேல் மாகாணம் முழுவதும் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சிக்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த அதிகளவான படையினர், சுகாதார அதிகாரிகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முப்படையினர் சுற்றுப்புறத் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுதல், அடைப்பட்டுள்ள வடிகான்களைச் சுத்திகரித்தல் மற்றும் அதிக அபாயமிக்க பகுதிகளில் வாழும் மக்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதியின் பணிப்புரைகளுக்கு அமைவாக, பாதுகாப்பு அமைச்சும் முப்படையினரும் இணைந்து, டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட தேசிய வேலைத்திட்டத்திற்கு இச்சமூக நல முயற்சியின் ஊடாக தொடர்ந்தும் முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.










