முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சி கட்டமைப்பை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பின்பற்றத் தவறிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தினோக் கொழும்பகே வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், தேசிய மக்கள் சக்தி ஆரம்பத்தில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் திட்டத்தைத் தொடர்ந்த போதிலும், அந்த உத்தியின் முக்கிய அங்கமாக இருந்த வளர்ச்சிப் பகுதியை புறக்கணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“ரூபாயின் மதிப்பு வலுவடைவதோடு, பணவீக்கம் 3% இற்குக் குறைவாகப் பேணப்பட வேண்டியிருந்தது. மாறாக, நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதுடன், பணவீக்கம் 6% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெறும் பொருளாதார ஸ்திரப்படுத்தலை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, அதற்கு இணையாக எந்தவொரு வளர்ச்சி நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்படாத நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டம் ஒரு “தனித்த திட்டமாக” மாறியுள்ளது என்று கொழும்பகே குறிப்பிட்டார்.
ஒரு விரிவான வளர்ச்சித் திட்டம் இல்லாமல், வறுமையைக் குறைத்து பொதுமக்களின் வருமான மட்டங்களை உயர்த்தும் அதேவேளையில், கடன் மீள்செலுத்தலுக்கு இலங்கை எவ்வாறு தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“கடன் மீள்செலுத்தலையும் மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டையும் சமநிலைப்படுத்த அரசாங்கம் எவ்வாறு உத்தேசித்துள்ளது என்பதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். வளர்ச்சித் திட்டமொன்று இல்லாமல், ஸ்திரப்படுத்தல் மட்டுமே பொருளாதார மீட்பைக் கொண்டுவர முடியாது” என்றும் கொழும்பகே வலியுறுத்தியுள்ளார்.










