மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 50 மெகாவாட் (MW) கொள்ளளவைக் கொண்ட ‘ஹேவிண்ட்’ (HayWind) காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான இறுதி விசையாழிகள் (Turbines) அடங்கிய கப்பல் தொகுதி திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் முதலாவது விசையாழித் தொகுதி சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையை வந்தடைந்ததுடன், திட்டப்பகுதியில் அவசியமான பொருத்துதல் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்திற்கான மின் கொள்வனவு உடன்படிக்கையானது ஒரு அலகுக்கு (Unit) 0.0465 அமெரிக்க டொலர் (சுமார் 14.37 ரூபாய்) என்ற விலையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது இலங்கையில் காற்றாலை மின் உற்பத்திக்காகப் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த மின் கட்டணமாகும்.
இந்தக் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் முழுமையாகச் செயற்படத் தொடங்கும்போது, புதைபடிவ எரிபொருள் (Fossil fuel) இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் நாட்டிற்கு ஆண்டுதோறும் சுமார் 4.7 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு நாணயத்தை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 186,300 மெட்ரிக் தொன் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் இது வழிவகுக்கும்.
2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின் உற்பத்தியில் 70 வீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் இலக்கிற்குப் பங்களிப்பு செய்வதாகவும், 2050ஆம் ஆண்டளவில் பூச்சிய கார்பன் உமிழ்வு (Net-zero) இலக்கை அடைவதற்கும் இத்திட்டம் துணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இதன் பணிகளை நிறைவு செய்து, தேசிய மின் கட்டமைப்புடன் 50 மெகாவாட் மின்சாரத்தை இணைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விசையாழிகளைப் பொருத்தும் மற்றும் பராமரிக்கும் பணிகளை ‘ஹேலீஸ் ஃபென்டன்ஸ் பிஎல்சி’ (Hayleys Fentons PLC) நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதுடன், அமைப்பின் கட்டுப்பாட்டையும் நிர்வாகத்தையும், மின்சக்தி அமைச்சின் கீழுள்ள தேசிய ஒழுங்கமைப்பு ஒபரேட்டர் (National System Operator) மேற்பார்வை செய்யும்.
இதேவேளை மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிராக மன்னார் மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
