ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு:இலங்கை மருத்துவ வரலாற்றில் சாதனை

ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இது இலங்கை மருத்துவ வரலாற்றின்  முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.

இடுப்பு பகுதியில் ஒட்டி இருந்த இந்த இரண்டு குழந்தைகளுக்கும் இரு சிறுநீரகங்கள் மட்டுமே இருந்துள்ளன. அந்த இரு சிறுநீரகங்களும் ஒரு குழந்தையின் உடலிலேயே இருந்துள்ளது.

எனினும் 24 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின்னர், இவர்கள் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போன்றதொரு நாட்டில் இப்படியொரு அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது முக்கியத்துவமிக்க விடயமாகும். இதற்கு முன்னர் ஒரு தடவை மாத்திரமே இப்படியான சிகிச்சை இலங்கையில் நடந்துள்ளது என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

பேராதனை போதனா வைத்தியசாலை , சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவப் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவினர் இணைந்து, கடந்த ஜூன் 10ஆம் திகதி மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் மூலம், ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான லினுலி தருல்யா (Linuli Tharulya) மற்றும் லிதுலி மனுல்யா (Lithuli Manulya) ஆகியோரை வெற்றிகரமாகப் பிரித்துள்ளனர்.

சிறுவர் அறுவை சிகிச்சை நிபுணர் மாதுல ஹெட்டியாராச்சி தலைமையிலான 15 பேரடங்கிய நிபுணத்துமிக்க மருத்துவ குழுவினர் இந்த சாதனயை படைத்துள்ளனர்.

சிறார்கள் இருவரும் தற்போது நலமாக உள்ளனர். அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

2021ஆம் ஆண்டு மாவனல்லை, அரநாயக்க பகுதியில் பிறந்த இந்த இரட்டையர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனர்.

இக்காலப்பகுதியில், இறுதிப் பிரிப்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பாக, மருத்துவக் குழுக்கள் விரிவான ஆய்வுகள், திட்டமிடல்கள் மற்றும் பல ஆரம்பகட்ட மருத்துவ நடைமுறைகளை மேற்கொண்டிருந்தன.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் சிக்கலான குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சைகளில் ஒன்றாகக் கருதப்படும் இதன் மூலம், இரட்டையர்கள் இருவரும் இரு தனித்தனி சுதந்திரமான குழந்தைகளாக வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அசாத்திய சாதனைக்காக இலங்கை மருத்துவ நிபுணர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றிற்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இருப்பினும், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி விமர்சனங்களைச் சந்தித்து வரும் நாட்டின் பொது சுகாதாரத் துறையின் தற்போதைய நிலை குறித்த விவாதங்களையும் இச்சம்பவம் மறுபுறம் கிளப்பியுள்ளது.

நாட்டிற்குள்ளேயே இவ்வாறான அதிநவீன மற்றும் விசேட மருத்துவ முறைகளை மேற்கொள்ளக்கூடிய வல்லமை இலங்கைக்கு உண்டு என்பதற்கு இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சையே சான்று என மருத்துவ வல்லுநர்களும் பொதுமக்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் இத்தகைய திறன்களை மேலும் மேம்படுத்த முடியும் எனவும், சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதுடன் நோயாளிகள் அதிக செலவில் வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவதைக் குறைக்கலாம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

Related Articles

Latest Articles