பிரிஸ்டலில் நேற்று நடந்த போட்டியில், 37 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, T 20 தொடர்களில் இந்தியாவிற்கு எதிராகத் தனது முதலாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை இந்தியா அணி பெற்றிருந்தது. எனினும், ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 13.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 9 விக்கெட்டுகளால் இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றது.
தற்போது 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் நாளை சனிக்கிழமை சவுதாம்ப்டனில் நடக்கவுள்ள போட்டியிலும் வெற்றி பெற்று, இந்தியாவை முழுமையாக (Clean sweep) வீழ்த்தினால், தற்போதைய உலக சாம்பியனான இந்தியாவைத் பின்னுக்குத் தள்ளி, ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடிக்கும்.
கடந்த ஆண்டு ஹாரி புரூக் கேப்டனாகப் பொறுப்பேற்றதில் இருந்து, இங்கிலாந்து அணி விளையாடிய 22 T20 போட்டிகளில் 19 இல் வெற்றி பெற்றுள்ளது.
ஐந்து வீரர்கள் 60-க்கும் மேற்பட்ட T20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட இங்கிலாந்து அணி, மிகவும் எளிமையான ஆனால் மிகச் சிறந்த உத்திகளைக் கையாண்டு இந்தியாவை வீழ்த்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடந்த 2026 T20 உலகக் கோப்பையின் அரையிறுதியில், இந்தியாவின் 254 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை விரட்டும்போது இங்கிலாந்து நூலிழப்பில் வெற்றியைத் தவறவிட்டது.
உலகக் கோப்பை அரையிறுதியோடு ஒப்பிடும்போது இந்தத் தொடர் சிறியதாக இருந்தாலும், அவர்கள் இந்தியாவை வீழ்த்தி ஒருவிதப் பழிவாங்கலைத் தீர்த்துக் கொண்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆண்கள் T20 போட்டிகளில் தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.
இந்த முடிவு, புதிய கேப்டனாகப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆன ஸ்ரேயாஸ் ஐயருக்கு (Shreyas Iyer) பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.










