வடகொரியா தனது அணு ஆயுதப் படையை தரம் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் வலுப்படுத்தவும், நாட்டின் உளவு அமைப்பின் பங்கை விரிவுபடுத்தவும் சபதம் ஏற்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை (10) தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் மத்திய ராணுவக் குழுவின் (Workers’ Party’s Central Military Commission) கூட்டத்தில், வடகொரியத் தலைவர்கள் நாட்டின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கான திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
அப்போது பேசிய அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் (Kim Jong Un), பலமான ராணுவத்தால் மட்டுமே “உண்மையான அமைதிக்கு” உத்தரவாதம் அளிக்க முடியும் என்று கூறியதாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“சாத்தியமான எதிரிகளின் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதிலும், முக்கியத் தகவல்களைச் சேகரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பொது உளவு மற்றும் புலனாய்வுப் பிரிவின் செயல்பாடுகள் மற்றும் பணிகளைப் பல கோணங்களில் விரிவுபடுத்துவதற்கும், அதன் ராணுவ உளவு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளின் திறனை அடியோடு மேம்படுத்துவதற்குமான பணிகளையும் வழிகளையும் இக்கூட்டம் முன்மொழிந்துள்ளது” என்று KCNA செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், நவீன கடற்படை தளங்களை அமைப்பதை விரைவுபடுத்தவும், போர் அமைப்புகளை மேம்படுத்தவும் இக்குழு திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவையின் கூற்றுப்படி, வடகொரியா கடந்த தசாப்தத்தில் தனது அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகவும், இது அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு அதிகரித்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வடகொரியா 2006 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆறு முறை அணு ஆயுத சோதனைகளை நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது.










