‘மலையக பல்கலைக்கழகம்’ – கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு

நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களுக்கென மலையக பல்கலைக்கழகம் அமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கையொப்பம் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் இந்த விசேட நடவடிக்கை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு, தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மலையக மாணவர்களின் உயர்கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாட்டின் கீழ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சமூகத்தின் பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் கையொப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அரசாங்க அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்த மகஜரில் ஆர்வத்துடன் கையொப்பமிட்டு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இதன்போது பெருமளவிலான கையொப்பங்கள் திரட்டப்பட்ட பின்னர், மலையக பல்கலைக்கழக அமைப்பிற்கான கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய விரிவான மனுவொன்று அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளதாக மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles