ஹட்டனில் மோதல் களமாகமாறிய ஆடுகளம்

ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ‘ஹட்டன் லீக் மேயர்ஸ் கப்’ (Hatton League Mayor’s Cup) கால்பந்து தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியின் போது இரு அணிகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

இச்சம்பவம் நேற்று (ஜூலை 11) ‘யங் மேட்ஸ்’ மற்றும் ‘நோர்வுட் சன்ரைஸ்’ ஆகிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஏற்பட்டுள்ளது.

போட்டி நிறைவடைய 7 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் இந்த மோதல் ஆரம்பமாகியுள்ளது.

அந்தச் சமயத்தில் யங் மேட்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

மைதானத்தில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக, வெளியில் இருந்த பல ரசிகர்கள் திடீரென மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் அது மோதலாக மாறியது.

இச்சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸாருக்கு உடனடியாகப் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மைதானத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, எஞ்சியிருந்த 7 நிமிட ஆட்டத்தை வேறொரு மைதானத்தில் நடத்தி முடிக்குமாறு நோர்வுட் சன்ரைஸ் அணியினர் போட்டி நடுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து போட்டி அமைப்பாளர்கள் விரைவில் இறுதி முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles