சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி, சுவிட்சர்லாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வாரெஸ் அடித்த அசாத்தியமான லாங்-ரேஞ்ச் (long-range) கோல் அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தது.

இதன் மூலம், அட்லாண்டா மைதானத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

கான்சாஸ் சிட்டி மைதானத்தில் ச நடைபெற்ற இப்போட்டியின் 10-வது நிமிடத்திலேயே, லியோனல் மெஸ்ஸி கொடுத்த கிராஸை (cross) அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் ஹெட்டர் மூலம் கோலாக மாற்றி அர்ஜென்டினாவை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.

எனினும், அதன் பின்னர் அர்ஜென்டினாவால் ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. திறமையாக விளையாடிய சுவிட்சர்லாந்து அணி 67-வது நிமிடத்தில் டான் ன்டோயே அடித்த கோல் மூலம் 1-1 என ஆட்டத்தைச் சமன் செய்தது.

ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோ நடுவரை ஏமாற்ற முயன்றதாக (simulation/dive) கூறி இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்தத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய VAR விதியின்படி, அர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பரேடெஸுக்குத் தவறாக மஞ்சள் அட்டை வழங்கப்பட்டதா (mistaken identity) என்பதை மறுபரிசீலனை செய்யுமாறு நடுவருக்கு VAR அறையிலிருந்து அறிவுறுத்தப்பட்டது.

ரீப்ளேயில் எம்போலோ வேண்டுமென்றே விழுந்தது தெரியவந்ததால், போர்ச்சுகல் நாட்டு நடுவர் ஜோவா பின்ஹீரோ தனது முடிவை மாற்றி, எம்போலோவுக்குச் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார்.

ஆட்ட நேர முடிவில் லிசாண்ட்ரோ மார்டினெஸ் அடித்த ‘சிசர்-கிக்’ (scissor-kick) கோலாக மாறவில்லை.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்ற நிலையில், 112-வது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரெஸ் 25 கெஜம் தூரத்திலிருந்து அடித்த அசுர வேகப் பந்து கோல் போஸ்ட்டின் வலது மேல் மூலையில் (top right corner) தஞ்சம் புகுந்தது.

ஆட்டத்தின் இறுதி வினாடிகளில் சுவிட்சர்லாந்து அணி சமன் செய்ய வேண்டி மொத்தமாக முன்னோக்கி நகர்ந்ததால், அவர்களது பின்களத்தில் பெரிய இடைவெளி ஏற்பட்டது.

இதனைப் பயன்படுத்திய அர்ஜென்டினாவின் தியாகோ அல்மாடா நடத்திய கவுண்டர்-அட்டாக் (counterattack) மூலம், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தின் ஸ்டாப்பேஜ் டைமில் லாடாரோ மார்டினெஸ் அர்ஜென்டினாவின் 3-வது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

கால்பந்து வரலாற்றில் இதுவரை இத்தாலி மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகள் மட்டுமே உலகக் கோப்பை மகுடத்தைத் தக்கவைத்துள்ளன (தொடர்ந்து இருமுறை வென்றுள்ளன). அந்தப் பட்டியலை எட்ட அர்ஜென்டினா முயன்று வருகிறது.

Related Articles

Latest Articles