வீடுகள் அமைக்க காணி தர மறுத்ததுடன், தோட்டத் தொழிலாளர்களைத் தரக்குறைவாக பேசிய கந்தப்பளை பார்க் (Park Estate) தோட்டத்தின் முகாமையாளரை மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தி முகாமையாளரின் வீட்டை தோட்டத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது
தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான காணிகளை ஒதுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் கந்தப்பளை பார்க் தோட்டத்திற்கு 305 வீடுகளை அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக காணிகளை ஒதுக்குவதில் குறித்த தோட்ட முகாமையாளர் இழுத்தடிப்புச் செய்துள்ளார். இதுகுறித்து இ.தொ.கா நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் மருதபாண்டி குறித்த தோட்ட முகாமையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். இதற்குப் பதிலளித்த தோட்ட முகாமையாளர், இவர்களுக்கு எதற்கு வீடுகள் அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளதுடன்,தோட்டத் தொழிலாளர்களை தரக்குறைவாக, தகாத வார்த்தைகளினால் முகாமையாளர் பேசியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய தோட்ட முகாமையாளர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், வீடுகளை அமைப்பதற்கு காணியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும் கோரி இ.தொ.கா ஆதரவாளர்கள் முகாமையாளரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனையடுத்து தோட்டத்தில் உள்ள பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் குறித்த முகாமையாளரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
அத்துடன், அங்கு இ.தொ.கா உள்ளிட்ட ஆதரவாளர்களும் கூடி தொழிலாளர்களிடம் மன்னிப்புக் கோரும் வரையில் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
எனினும், குறித்த முகாமையாளர் வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இதுகுறித்து கந்தப்பளை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது பொலிசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
முகாமையாளர் மன்னிப்பு கோரும் வரையில் போராட்டம் தொடரும் என்று தொழிலாளர்கள் கூறிவருகின்றனர்.