பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மாறிப் போனதா? கையறு நிலையில் மாணவி

கொட்டகலை மஞ்சள் கடவையில் மோதுண்ட மாணவி : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மாறிப் போனதா? கையறு நிலையில் மாணவி

கொட்டகலை பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி மஞ்சள் கடவையில் மோதுண்டு காயமடைந்த மாணவியின் விபத்தை விசாரித்த கொட்டகலை பொலிசார் சம்பவத்தைத் திரிபுபடுத்தியுள்ளார்களா என்பது குறித்து விசாரிக்க பணிப்புரை வழங்கியுள்ளதாக நுவரெலியா தலைமையகப் பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன், காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் ஒரேநாளில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், மாணவிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதைக் காண்பிப்பதற்காக இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கொட்டகலையில் கடந்த 30ஆம் திகதி மஞ்சள் கடவையில் முச்சக்கர வண்டி மோதுண்டு மாணவியொவர் மீது மோதியுள்ளது. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவியொருவரே விபத்தில் சிக்கியுள்ளார். ஸ்டொலிகிளிப் தோட்டத்தைச் சேர்ந்த மாணவி கொட்டகலை நகருக்கு வந்திருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்த மாணவி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரே நாளில் வீட்டிற்க அனுப்பப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் தொடர்ந்து அனுமதிக்கப்படும் பட்சத்தில் விபத்து குறித்து பொலிசார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் இவ்வாறு உடனடியாக வீட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் விபத்து குறித்த பொலிஸ் நிலைய பதிவில், குறித்த மாணவி முச்சக்கர வண்டியில் பயணித்த போது அதிலிருந்து விழுந்துள்ளதாக எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும்,இந்தத் தகவலை கொட்டகலை பொலிசார் இன்னமும் உறுதி செய்யவில்லை. எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் குறித்து கொட்டகலை பொலிசாரின் விசாரணையில் திருப்தி இல்லாததால் குறித்த மாணவியின் தோட்டத்தில் உள்ள நலன்விரும்பி ஒருவர், நுவரெலியா பொலிஸ் தலைமையக அதிகாரியொருவரை நாடியுள்ளார். சம்பவத்தைக் கேட்டறிந்த குறித்த அதிகாரி, கொட்டகலை பொலிசாரிடம் இதுகுறித்து விசாரிக்குமாறு பணித்துள்ளார். இதனையடுத்தே கொட்டகலை பொலிசார் மீண்டும் வாக்குமூலம் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த மாணவியின் குடும்பத்தில் தந்தை நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், தாய் தோட்டத் தொழிலாளி ஈடுபட்டுள்ள நிலையில், இரண்டு சகோதரிகள் கொழும்பில் பணிபுரிந்து வீட்டு வறுமையை போக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நுவரெலியா பொலிஸ் நிலையத்தை நாடியதாக குறித்த நபர் குறிப்பிட்டுள்ளா◌ார்.

எவ்வாறாயினும், விபத்தில் காயமடைந்து உபாதைக்குள்ளான மாணவியை மஞ்சள் கடவையில் மோதிய குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்கும், மாணவிக்கு உதவிகளை வழங்குவதைத் தவிர்க்கவும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டுள்ள குறித்த மாணவிக்கு விபத்தை ஏற்படுத்திய தரப்பினர் உரிய முறையில் நட்டஈட்டை வழங்க வேண்டும் என்றும் இல்லையெனில், இதுகுறித்து நீதிமன்றத்தில் தீர்வு எட்டப்பட நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.

விபத்தை ஏற்படுத்தி நபர் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக விபத்தை நேரில் பார்த்த பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வீதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV காணொளியில் பதிவாகியுள்ள விபத்து

Related Articles

Latest Articles