உலகளவில் தங்கம் விலை வீழ்ச்சி: இலங்கையில் விலை குறைவைக் கட்டுப்படுத்திய ரூபாயின் வீழ்ச்சி

சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்து வருகிறது. இருப்பினும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உள்ளூர் சந்தையில் இந்த தங்க விலை வீழ்ச்சியின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரத்தினக் கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) தெரிவித்துள்ளது.

இலங்கை ரத்தினக் கல் மற்றும் ஆபரண சங்கத்தின் (SLGJA) ஆபரணப் பிரிவின் தலைவர் செல்லக்குமார் கந்தசாமி கருத்துத் தெரிவிக்கையில், சர்வதேச தங்கம் விலையானது சமீபத்தில் ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலர் வரை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் தங்கம் விலை 4,000 முதல் 4,100 அமெரிக்க டொலருக்கு இடையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதுடன், சில நேரங்களில் 4,000 டொலர் வரம்பிற்கும் சற்றே கீழ் இறங்குவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் தங்கம் விலையும் இந்த சர்வதேச போக்கைப் பின்பற்றியுள்ள போதிலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பலவீனம் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஓரளவு ஈடுசெய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் சுமார் 320 ரூபாயாக இருந்த டொலரின் மதிப்பு, தற்போது 340 ரூபாய் வரம்பை நோக்கி நகர்ந்துள்ளதால், சர்வதேச தங்கம் விலை வீழ்ச்சியடைந்ததன் முழுமையான பலன் உள்ளூர் நுகர்வோருக்குக் கிடைப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில் அதிகரித்துள்ள அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த அச்சமே, அண்மைய தங்க விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று திரு. கந்தசாமி கூறினார்.

மேலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் (US Federal Reserve) வங்கி அண்மைக்காலத்தில் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், மாறாக வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என்ற ஊகங்கள் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய நிலமைகள், தங்கத்தின் விலைக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்து, சந்தையில் தொடர்ந்து நிலையற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles