ஈரான்மீது 7 ஆவது நாளாகவும் உக்கிர தாக்குதல்: பாலங்கள் தகர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவித்ததைத் தொடர்ந்து, ஏழாவது இரவாகவும் ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நாட்டின் தலைமை தளபதியின் உத்தரவின் பேரில், ஈரானின் ராணுவத் திறன்களைத் தொடர்ந்து சீர்குலைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC), ஹோர்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) கண்ணிவெடிகள் வைக்கப்பட்ட கடல் வழியே பயணித்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் (Oil Tankers) வெடித்துச் சிதறியதாகக் குறிப்பிட்டிருந்தது. எனினும், இக்கூற்றை அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தனது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில், “வழக்கமான ஈரானிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கூற்றுக்களைப் போலவே, இதுவும் முற்றிலும் பொய்” என்று பதிவிட்டுள்ளது.

மறுபுறம், ஈரானின் மத்திய நகரான யாஸ்த் (Yazd), கெஷ்ம் தீவு (Qeshm Island) மற்றும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) துறைமுகப் பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முடங்கியது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்து

அமெரிக்க மற்றும் ஈரானிய படைகளுக்கு இடையே தொடர்ந்து வரும் இந்த பரஸ்பர தாக்குதல்களால், உலகளாவிய ரீதியில் மிக முக்கிய கடல் போக்குவரத்துப் பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியின் கப்பல் போக்குவரத்து பெருமளவில் முடங்கியுள்ளது.

சாதாரண காலங்களில், உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் முதன்முறையாக சிரியாவில் உள்ள பல அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானிய ஆயுதப் படைகள் உரிமை கோரியுள்ளன. ஆனால், இதனை அமெரிக்கா மறுத்துள்ளது.

இருப்பினும், ஈரானிய ட்ரோன் தாக்குதல்களால் தங்களது வீரர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையம் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் சேதமடைந்துள்ளதாகவும் குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், கடந்த வாரத்தில் ஜோர்டானில் உள்ள இரண்டு அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பல அமெரிக்க சேவைப் பிரிவினர் காயமடைந்ததாக பிபிசியின் அமெரிக்க பங்காளியான சிபிஎஸ் (CBS) செய்திச் சேவைக்கு நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சேதமடைந்த உள்கட்டமைப்புகள்

பாலங்கள், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட ஈரானின் சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறிய குற்றச்சாட்டை வாஷிங்டன் மறுத்துள்ளது.

பாலங்கள், இரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட ஈரானின் சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறிய குற்றச்சாட்டை வாஷிங்டன் மறுத்துள்ளது.

எனினும், பாதிக்கப்பட்ட ஹோர்மோஸ்கான் (Hormozgan) மாகாண அதிகாரிகள், இந்தத் தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், இரவு நேரத்தில் ஏற்பட்ட தீப்பிழம்புகளின் வீடியோக்களைத் தொடர்ந்து, காரிவே பாலம் (Gariveh Bridge) சேதமடைந்துள்ளதை (BBC Verify) மற்றும் (BBC Persian) பிரிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பகல்நேரப் படங்களில், உடைந்த பாலத்தைச் சுற்றி இடிபாடுகளுடன் சாலை முற்றிலும் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவிக்கையில், “அமெரிக்கா பிரத்தியேகமாக ராணுவ தளவாட உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது” என்று கூறினார்.

ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலம் குறித்த பதற்றங்கள் காரணமாக, நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா நடத்தும் ஒரு வார கால தொடர் இரவு நேரத் தாக்குதலாக இது பதிவாகியுள்ளது.

Related Articles

Latest Articles