சவூதி அரேபியாமீது உடன் அமுலுக்குவரும் வகையில் கடல்சார் முற்றுகையை (Naval blockade) விதிப்பதாக யேமனின் ஈரான் ஆதரவு ஹவுதி (Houthis) கிளர்ச்சியாளர்கள் திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.
அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலில் இது புதியதொரு முனையைத் திறந்துள்ளதோடு, உலகளாவிய எரிபொருள் விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியா, யேமன் மீது விதித்துள்ள நீதியற்ற முற்றுகைக்கு பதிலடியாக, “கண்ணுக்குக் கண்” என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹவுதி ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.
இந்த அறிவிப்பு குறித்து சவூதி அரேபியா உடனடியாக எந்த அதிகாரப்பூர்வ கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
ஈரானின் மின்சார மற்றும் ஆற்றல் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், செங்கடலின் நுழைவுவாயிலான பாப் எல்-மண்டெப் (Bab el-Mandeb) ஜலசந்தியை மூடுமாறு ஹவுதிகளுக்கு ஈரான் அழுத்தம் கொடுத்து வந்தது.
பாப் எல்-மண்டெப் ஜலசந்தி முழுமையாக மூடப்பட்டால், சவூதி அரேபியாவின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதி முடங்கும். இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் 7% வீழ்ச்சி ஏற்படும்.
வளைகுடாப் பிராந்தியப் போரினால் ஏற்கெனவே உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 10% அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஹவுதிகளின் இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் சந்தையில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் தாக்குதல்கள் தீவிரமடைந்தாலும், மற்றொருபுறம் போர்நிறுத்தத்தை எட்ட அமெரிக்காவும் ஈரானும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான மோதலைத் தணித்து 10 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை மத்தியஸ்தர்கள் வழங்கியுள்ளதாக ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மூலமாகவும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஈரான் முயன்று வருகிறது.










