2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்குவதற்கு முதன் முதலில் தனக்கே அழைப்பு விடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், கட்சி மீதிருந்த பற்றால் அந்த வாய்ப்பை தான் நிராகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
“2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், பொது வேட்பாளராகப் போட்டியிடுமாறு எனக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதி பதவியை விட எனது கட்சியையே நான் அதிகம் நேசித்ததால் அந்த கோரிக்கையை நிராகரித்தேன். அதனால்தான் இன்றளவிலும் நான் கட்சியில் நீடிக்கின்றேன்.
இன்று நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருவித அரசியல் சுனாமியில் சிக்கியுள்ளன. இத்தகைய சவால்மிக்க காலகட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நான் வழிநடத்துவது எனக்குப் பெருமைக்குரிய விடயமாகும்.
தற்போது எதிர்க்கட்சிகளிடம் 58 சதவீத வாக்கு வங்கி இருந்தபோதிலும், வெறும் 42 சதவீத வாக்கு வங்கியை மட்டுமே கொண்ட தரப்பு நாட்டை ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். எனவே, இனியாவது அனைவரும் இந்த யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.”என்றார்.










