பொலிவியா ராணுவ முகாமில் வெடிவிபத்து: 10 பேர் பலி

பொலிவியாவின் ல பாஸ் (La Paz) நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வியாச்சா (Viacha) நகராட்சியின் ராணுவ முகாம் ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரும் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்து சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்டாசு சேமிப்புக் கிடங்கில் இருந்தே இந்த வெடிப்பு தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் 10 முதல் 15 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், 62 பேர் காயமடைந்துள்ளதாகவும் வியாச்சா சுகாதாரப் பணிப்பாளர் ரீட்டா நெப்ராஸ்கா உள்ளூர் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் 13 வயதுச் சிறுமி உட்பட 14 பேர் தீவிர சிகிச்சைக்காக ல பாஸ் நகர மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சக்திவாய்ந்த வெடிப்பினால் எழுந்த அதிர்வில் சுற்றியுள்ள பல வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த ராணுவ வளாகத்திற்கு ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் இன்னும் வெப்பத்தின் தாக்கம் நீடிப்பதால் மீண்டும் ஒரு வெடிப்பு நிகழ வாய்ப்புள்ளதாக தீயணைப்பு வீரர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் அப்பகுதியை விட்டு குறைந்தது 150 மீட்டர் தொலைவில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles