2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது வேதனையையும் , அணியின் சாதனை குறித்த பெருமையையும் பகிர்ந்துள்ளார்.
தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளுக்கு தகுதி பெற்றதே ஒரு மிகப்பெரிய சாதனை எனக் குறிப்பிட்ட அவர், தங்களுக்கு ஆதரவளித்த அர்ஜென்டினா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இதுகுறித்து லியோனல் மெஸ்ஸி தனது செய்தியில் கூறியிருப்பதாவது:
” இந்தத் தோல்வியால் ஏற்பட்ட வலி மிகப்பெரியது; இந்த வடு ஆறுவதற்குக் கொஞ்ச காலம் எடுக்கும்.
நாம் போராடி வெற்றிபெற்ற போட்டிகள், களத்தில் நாம் சிந்திய வேர்வை, நமது நினைவில் என்றும் நிலைத்திருக்கும் தருணங்கள் மற்றும் முழு நாட்டின் ஆதரவு – இவை அனைத்தும் இந்த அணியின் உழைப்போடு சேர்ந்து எம்மை மீண்டும் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
இன்று நாம் சாதித்ததை முழுமையாக உணர்வது கடினமாக இருக்கலாம், ஆனால் இந்த அணி தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறியுள்ளது.
உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளுக்கும், செய்திகளுக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நாம் ஒரு நாடாக ஒன்றிணைந்து, அர்ஜென்டினாவாசி என்பதில் பெரும் பெருமிதம் கொள்கிறோம்.
உலகக்கோப்பையைக் கைப்பற்றிய ஸ்பெயின் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”










