தாய்வான் அரசாங்கத்தின் அண்மைய விசா கொள்கைக்கு அமைய, இலங்கை பிரஜைகளிடமிருந்து பெறப்படும் சுற்றுலா விசா விண்ணப்பங்களை ஏற்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
“சீனக் குடியரசு (தாய்வான்) அரசாங்கத்தின் அண்மைய விசா கொள்கைக்கு இணங்க, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பிரஜைகளிடமிருந்து பெறப்படும் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் இனி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்வான் அரசாங்க முகவர் நிலையத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் வருகை தருதல், பரிமாற்ற நடவடிக்கைகள், உறவினர்களை சந்தித்தல் (மூன்றாம் நிலை உறவுமுறைக்குள்), வியாபாரம், தாய்வானில் உள்ள கப்பலில் சேருதல் அல்லது மருத்துவ சிகிச்சை ஆகிய காரணங்களுக்காக வருகை தருபவர்கள் இன்னமும் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள், சென்னையில் உள்ள தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம் அல்லது சிங்கப்பூரில் உள்ள தைபே பிரதிநிதித்துவ அலுவலகம் ஆகியவற்றால் பரிசீலிக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தாய்வானில் உள்ள பொறுப்பேற்பாளரிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் (தூதரக விவகாரப் பணியகம், உள்நாட்டு கிளை அலுவலகம் அல்லது தாய்வான் வெளிநாட்டுத் தூதரகத்தால் சான்றளிக்கப்பட்டவை), உத்தரவாதக் கடிதம் (letter of Guarantee) மற்றும் உத்தரவாதம் வழங்குபவரின் தாய்வான் தேசிய அடையாள அட்டையின் பிரதி ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன், கடவுச்சீட்டின் விபரப் பக்கத்தின் பிரதி, பொலிஸ் நற்சான்றிதழ், நிதித் திறனுக்கான சான்று, தாய்வானில் தங்குவதற்கான சான்று மற்றும் திரும்பும் விமான பயணச்சீட்டு ஆகியவற்றையும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களும் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.










