கண்டி மாவட்டம், தெல்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கலஹா – மல்பேரி மற்றும் அப்பர் கலஹா கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று (திங்கட்கிழமை) மதியம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘திட்வா’ புயல் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், தங்களுக்கு இதுவரை உரிய இடத்தில் காணிகளை ஒதுக்கித் தரவில்லை எனக் குற்றம்சாட்டியே கலஹா குறுக்குப் பாலத்திற்கு அருகில் மக்கள் பாதாதாங்கிகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த புயல் பாதிப்பினால் 29 குடும்பங்களின் வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இதனால் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்த அம்மக்கள், தற்போது வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, தாங்கள் ஏற்கனவே வாழ்ந்த அதே பிரதேசத்திலேயே உடனடியாக தமக்குரிய காணிகளை அரசாங்கம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே பொதுமக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.










