பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் போரில் ஈடுபட்டபோது, உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு பயணிக்கும் மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திடீரென உலகச் சந்தைகளிலிருந்து துண்டிக்கப்பட்டதால், மசகு எண்ணெய்யின் விலை ஒரு பேரலுக்கு 150 அல்லது 200 டாலர் வரை உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.
இருப்பினும், பிரென்ட் (Brent) மசகு எண்ணெய் விலையானது உச்சக்கட்டமாக சுமார் 126 டொலரை மட்டுமே தொட்டது. இது 2008 ஆம் ஆண்டின் உச்ச விலையான 147 டொலரை விட மிகவும் குறைவானதாகும்.
மேலும் பெப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதிலிருந்து, ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தச் சொன்ன ஜூன் 11 வரையிலான காலப்பகுதியில், இதன் சராசரி விலை பேரலுக்கு 101 டொலராக மட்டுமே இருந்தது. பின்னர் ஜூலை தொடக்கத்தில் போர் தொடங்குவதற்கு முந்தைய மட்டமான 70 டொலருக்குச் சற்று குறைந்திருந்தது.
மசகு எண்ணெய்யின் விலை கணிசமாக உயராததற்கு காரணங்கள் என்ன?
1. சீனாவின் வியப்பூட்டும் நகர்வு
உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் இறக்குமதியாளரான சீனா, ஜூன் மாதத்திற்குள் தனது மசகு எண்ணெய் இறக்குமதியை கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவிற்குக் குறைத்தது. அதன் எரிபொருள் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டது, அந்நாட்டு மக்கள் தனிப்பட்ட கார்களுக்குப் பதிலாக மின்சார டாக்சிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர், மேலும் அதன் பெட்ரோ கெமிக்கல் துறையும் அதன் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டது.
2. அமெரிக்காவின் அதிகப்படியான உற்பத்தி
உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான அமெரிக்கா, ஏப்ரல் மாதத்திற்குள் தனது உற்பத்தியை நாளொன்றுக்கு 13.93 மில்லியன் பேரல்கள் என்ற உச்ச அளவுக்கு உயர்த்தியது. மேலும், மார்ச் மாதத்தில் சர்வதேச எரிசக்தி முகமையினால் (IEA) ஒருங்கிணைக்கப்பட்ட உச்ச அளவிலான 400 மில்லியன் பேரல் எண்ணெய் விடுவிப்பின் ஒரு பகுதியாக, அமெரிக்கா தனது மூலோபாய பெட்ரோலிய இருப்பிலிருந்தும் (Strategic Petroleum Reserve) மசகு எண்ணெயை வெளியிட்டது. இது விநியோகத் தடைகளைச் சமாளிக்க உதவியது.
3. டிரம்ப்பின் கருத்துகளும் வர்த்தகர்களின் எச்சரிக்கை நிலையும்
சமாதான ஒப்பந்தங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியிலான வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட தொடர்ச்சியான அறிக்கைகள், எண்ணெய் சந்தையில் விலையேற்றத்தை எதிர்பார்த்தவர்களை மீண்டும் மீண்டும் தவறான கணக்கு போட வைத்தன.
திடீரென சந்தையில் ஏற்படும் தலைகீழ் மாற்றங்கள் குறித்த அச்சம் காரணமாக பல வர்த்தகர்கள் பெரிய அளவிலான விலையேற்ற பந்தயங்களைக் கட்டத் தயங்கியதால், எண்ணெய் சந்தையின் பணப்புழக்கம் (Liquidity) குறைந்தது.
சந்தையானது தொடர்ச்சியான செய்திகளால் அலுப்படைந்துள்ளது, இது புதிய அறிவிப்புகளால் விலையில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கிறது என்று, இணையவழி வர்த்தகம் மற்றும் முதலீட்டில் நிபுணத்துவம் பெற்ற டேனிஷ் முதலீட்டு வங்கியான சாக்ஸோ (Saxo Bank) தெரிவித்துள்ளது.
4. ஹோர்முஸ் வழியிலான விநியோகம் மீண்டெழுதல்
வளைகுடாவின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, செங்கடலின் யான்பு (Yanbu) துறைமுகத்திலிருந்து ஏற்றுமதியை கணிசமாக உயர்த்தியது. இது ஹோர்முஸ் நீரிணை வழியிலான விநியோக இழப்பை ஈடுசெய்ய உதவியது.
ஜூன் மாதத்தில் ஹோர்முஸ் வழியிலான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் மசகு எண்ணெய் தாராளமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது, ஆனால் ஜூலை மாதத்தில் மீண்டும் போர் தொடங்கியதால் அது மீண்டும் குறைந்தது.
5. உடனடி மசகு எண்ணெய் விநியோகம் தாராளமாகக் கிடைத்தல்
உடனடி விநியோகத்திற்கான மசகு எண்ணெய் போதுமான அளவு சந்தையில் இருப்பதாகவும், இதுவே போரின் புதிய தீவிரத்திற்கு ஏற்ப விலை உயர்வதைக் கட்டுப்படுத்துவதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.











