செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள் மீட்பு: நீதிகோரி நாளை போராட்டம்

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாளான இன்று 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 4 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று சிறுவர்களுடைய  என்புத் தொகுதிகளாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 94 நாட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழ்வுப் பணிகளின் மூலம் இதுவரையில் 467 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 444 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணியில் நீதி கோரி
உறவுகள் நாளை போராட்டம்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை செம்மணியில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் புதைகுழியைப் பார்வையிட நாளை வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் ஊடாக சர்வதேச விசாரணைக்கு வழியேற்படுத்த வேண்டும் எனக் கோரியே, நாளை காலை 8 மணிக்குச் செம்மணியில் இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles