தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இலங்கையின் நீதித்துறையில் அரசியல் தலையீடுகளை மேற்கொண்டு வருவதால், நாட்டின் உள்ளக நீதிப் பொறிமுறை மீதான நம்பிக்கையைச் சர்வதேச சமூகம் இழக்கக் கூடும் என்றும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் முப்படையினருக்கு எதிராக அப்பட்டமான போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் சர்வதேச மட்டத்தில் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.
எங்களது ஆட்சிக் காலத்தில் இந்தப் பிரச்சினை எழுந்தபோது, வெளிநாட்டு நீதிமன்றப் பொறிமுறை அவசியமில்லை என நாம் திட்டவட்டமாகக் கூறினோம். எமது நாட்டில் நம்பகரமான நீதிமன்றக் கட்டமைப்பு உள்ளதையும், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியான நீதிபதிகள் இலங்கையிலேயே இருப்பதையும் சுட்டிக்காட்டினோம்.
மனித உரிமைகள் என்ற போர்வையில் எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் வெளித்தரப்பினர் தலையிடுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கவில்லை. எமது உள்ளக நீதிமன்றக் கட்டமைப்பு வலுவாக இருந்த காரணத்தினாலேயே, சர்வதேச அளவிலான ஆதரவும் அப்போது நமக்குக் கிடைத்தது.
ஆனால், இன்று இலங்கையின் நீதித்துறை அரசியல் மயமாக்கப்பட்டு வருகிறது. சில நீதிபதிகள் கட்டாயமாக வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர்; சிலருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி, உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் பல நீதிபதி பணியிடங்கள் காலியாகவே உள்ளன. ஏன் இந்த வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன? இதன் பின்னணியில் நிறைவேற்று அதிகாரத்தின் மறைமுக நோக்கம் ஏதேனும் உள்ளதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
நீதிமன்ற வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம்கூட வலியுறுத்தியுள்ளது. ஆனால் அரசாங்கம் அதைச் செய்யவில்லை. இதனால் பாரிய பாதக விளைவுகள் ஏற்படும்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள சூழலில், சர்வதேச ரீதியில் இவ்விவகாரம் தீவிரமாகப் பேசப்படும். இது இலங்கைக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தனிநபர்களின் குறுகிய அரசியல் லாபங்களுக்காக நாட்டை மீண்டும் ஒரு சர்வதேசப் பிரச்சினைக்குள் தள்ள இடமளிக்க முடியாது.” – என்றார்










