மலேசியாவில் இலங்கை தொழிலதிபர் கைது: ஏமாற்றப்பட்ட பெண் மீட்பு: மேலும் அறுவருக்கு தடுப்பு காவல்

தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பணியாற்ற வைத்த குற்றத்துக்காக மலேசியாவில் இலங்கையைச் சேர்ந்த ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, இதில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பெண் ஒருவர் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

சிலாங்கூர், ஜெஞ்சாரோம் (Jenjarom) பகுதியில் மலேசிய குடிவரவுத் துறையின் மனித கடத்தல் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்ற எதிர்ப்பு (ATIPSOM) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டப் (AMLA) பிரிவு நடத்திய நடவடிக்கையின் போது 38 வயதான இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெண் ஒருவர் கட்டாய பணிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் கிடைத்த பொதுமக்கள் புகார் மற்றும் புலனாய்வுத் தகவல்களைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது அனுமதிகள் எதுவுமின்றி தங்கியிருந்ததாகக் கூறி, 21 முதல் 51 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஆறு இலங்கை பிரஜைகளையும் அதிகாரிகள் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

மலேசியாவின் மனித கடத்தலுக்கு எதிரான தேசிய வழிகாட்டுதல்களின் கீழ் குறித்த இலங்கை பெண் ஒரு பாதிக்கப்பட்ட நபராக அடையாளங்காணப்பட்டு மீட்கப்பட்டதாகக் குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.

குறித்த பெண் வேலைவாய்ப்பு மற்றும் வேலை அனுமதிப் பத்திரம் தருவதாக மலேசியாவிற்கு வரவழைக்கப்பட்டு, சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகத்தில் ஊதியம் இன்றி கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் அவருக்குப் போதிய உணவு மறுக்கப்பட்டதாகவும், அவரது நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், உடலளவில் துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேசியப் பிரஜை ஒருவரைத் திருமணம் செய்ததன் மூலம் நீண்டகால வதிவிட விசா அனுமதியைக் (Long-Term Social Visit Pass) கொண்டுள்ள இந்த சந்தேகநபர் மீது, மலேசியாவின் மனித கடத்தல் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்ற எதிர்ப்புச் சட்டம் மற்றும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Articles

Latest Articles