கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் துறைமுகத்திற்கு புதிய ரயில் சேவை நாளை ஆரம்பம்

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னார் துறைமுகத்திற்கும் இடையே நாளை (ஜூலை 24) முதல் புதிய ரயில் சேவையை இலங்கை ரயில்வே திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளது.

இதன்படி, இலக்கம் 5003 கொண்ட ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் துறைமுகத்திற்கும், இலக்கம் 5004 கொண்ட ரயில் தலைமன்னார் துறைமுகத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கும் இயங்கும்.

இந்த ரயில் அதிகாலை 3.50 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு காலை 10.44 மணிக்கு தலைமன்னார் துறைமுகத்தைச் சென்றடையும். மறுமார்க்கமாக, தலைமன்னார் துறைமுகத்திலிருந்து அதிகாலை 4.10 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கும்.

இந்தச் சேவை கம்பஹா, பொல்கஹவெல, குருநாகல், கல்கமுவ, அனுராதபுரம், மடு வீதி, மன்னார், பேசாலை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் ஊடாகச் செயல்படும்.

அனுராதபுரம் புதிய நகர ரயில் நிலையத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை இந்த ரயில் அங்கு நிறுத்தப்படாது என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

இப்புதிய சேவையில் ஆசன முன்பதிவு வசதிகளுடன் கூடிய இரண்டு குளிரூட்டப்பட்ட முதல் வகுப்புப் பெட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. பயணிகள் ரயில்வே முன்பதிவு முறைமை மூலமாகவோ ரயில் நிலையங்களுக்குச் சென்றோ ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும்.

இந்தப் புதிய ரயில் சேவை தொடங்குவது குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு இலங்கை ரயில்வே ஊடகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Latest Articles