“தங்க மகளின் முகத்தைக்கூட காணலையே…” கதறி அழுத தமயந்தியின் பெற்றோர்!

“ கடவுளே! எங்கள் ஒரே மகளுக்கு அப்படி என்ன குற்றம் நேர்ந்தது? நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் குழந்தையின் முகத்தைக் கூடக் கடைசியாகப் பார்க்க முடியவில்லையே… தயவுசெய்து எங்கள் மகளை உயிருடன் மீட்டுத் தாருங்கள்…”

ஹோமகம ஹெல்மெட் தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இளம் பெண் வரதராஜா தமயந்தியின் இறுதிச்சடங்கு இல்லத்தில் எதிரொலித்த அந்த வேதனக் குரல், அங்கு வந்திருந்த அனைவரதும் விழிநீரை பெருக்கெடுக்க வைத்தது.

மஸ்கெலியா, பிரன்ஸ்விக் குயின்ஸ்லேண்ட் தோட்டப் பகுதியைச் சேர்ந்த வரதராஜா தமயந்தி (26), தன் பெற்றோர் மற்றும் மூன்று சகோதரர்களுடன் வசித்து வந்தார்.

ஒரு மூத்த சகோதரரும், இரண்டு இளைய இரட்டைச் சகோதரர்களும் கொண்ட குடும்பத்தில் தமயந்திதான் ஒரே பெண் குழந்தை. மஸ்கெலியா குயின்ஸ்லேண்ட் தோட்டப் பள்ளியில் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்.

தனது தோழிகள் கொழும்புப் பகுதிகளில் வேலைக்குச் செல்வதைப் பார்த்த தமயந்திக்கும், தோட்டத் தொழிலாளர்களான தன் பெற்றோருக்கு நிதி ரீதியாக உதவ வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அதற்காக அவர் முதலில் கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிக்காகச் சேர்ந்தார்.

அங்கு 3 ஆண்டுகள் வேலை செய்துள்ளார். பின்னர், தையல் வேலை சிரமமாக இருப்பதாகக் கூறி, ஹோமகமவில் உள்ள ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்குச் சேர்ந்து 6 மாதங்கள்தான் ஆகின்றன. இந்நிலையிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றது.

மகளின் இழப்பைத் தாங்க முடியாமல் கதறி அழுதபடி அவரது தந்தை கிட்னன் வரதராஜா கருத்து வெளியிடுகையில்,

“ நான் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்கிறேன். என் மனைவியும் கொஞ்சக் காலம் தோட்டத்தில் வேலை செய்தார், இப்போது உடலநலம் காரணமாக வேலைக்குச் செல்வதில்லை. தமயந்தி எங்கள் குடும்பத்தின் இரண்டாவது பிள்ளை, ஒரே மகள்.
தினமும் எங்களுடன் தொலைபேசியில் பேசுவாள். ‘என் சம்பளத்தில் குடும்பத்துக்கு உதவ வேண்டும், என் தேவைகளையும் நானே பார்த்துக்கொள்வேன்’ என்பாள்.

அவளுக்குத் திருமண வயது வந்ததால், மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கலாம் என நானும் என் மனைவியும் பலமுறை கூறினோம். அவளோ, ‘அதற்கெல்லாம் இன்னும் அவசரம் இல்லை’ என்று மறுத்துவிட்டாள்.

கடந்த ஏப்ரல் மாதம் சித்திரைப் புத்தாண்டிற்காக வீட்டிற்கு வந்தவள், அதன்பின் 3 மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை. ஐயோ! இறுதியில் என் மகளின் முகத்தைக் கூடக் கடைசியாகப் பார்க்க முடியாமல் போய்விட்டதே…” என கதறி அழுதார்.

தாயார் கிருஷ்ணன் பவானி (50) தன் மகளின் உருவப்படத்தைப் பிடித்துக்கொண்டு, “ஐயோ கடவுளே! என் மகளுக்கு ஏன் இந்த நிலைமை? பெற்ற வயிறும் மனசும் துடிக்குதே… என் மகளின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கும் பாக்கியம் கூட எனக்கு இல்லையா?” என அழுது புலம்பியது காண்போரைச் சோகத்தில் ஆழ்த்தியது.

உடலம் முற்றிலும் கருகியிருந்ததால், மூடப்பட்ட பெட்டியிலேயே அவரது உடலம் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெட்டியின் மீது தமயந்தியின் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 23-ஆம் தேதி அதிகாலை 3.00 மணியளவில், தமயந்தியின் உடலம் மஸ்கெலியாவில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. துயரத்தில் மூழ்கியிருந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தோட்டப் பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அங்கு வந்த ஒவ்வொருவரும், “இப்படி ஒரு கொடூரமான துயரம் இனி யாருக்கும் நடக்கக்கூடாது” என வேதனையுடன் தெரிவித்தனர். தமயந்தியின் இறுதிச்சடங்குகள் நேற்று மாலை 4.00 மணியளவில் குயின்ஸ்லேண்ட் தோட்டப் பொது மயானத்தில் நடைபெற்றது.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles