நீதித்துறையில் கை வைத்தால் ஆட்சி மாற்றமே ஏற்படும்

“நீதித்துறையில் தலையீடு செய்ய முற்படும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் ஏதேச்சாதிகாரப் பயணத்தை நாம் ஒன்றிணைந்து தோற்கடிப்போம். நீதித்துறையில் கை வைத்தால் அது ஆட்சி மாற்றம் வரை கொண்டு சென்று விடும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரதான எதிர்க்கட்சிகள் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கூட்டம் ஒன்றை நடத்தின.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட எதிரணியிலுள்ள பல்வேறு கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது:

“இந்நாட்டில் நீதித்துறையின் சுயாதீனத்தில் ஆட்சியாளர்கள் தலையிட முற்பட்ட அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், அது இறுதியில் ஆட்சி மாற்றம் வரை அழைத்துச் சென்றுள்ளது என்பதே வரலாறு.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த ஏதேச்சாதிகார அரசாங்கமும் தற்போது நீதித்துறையில் கை வைத்துள்ளது. ஆனால், முற்போக்குச் சிந்தனையுள்ள பிரஜைகளாக இந்த முயற்சியை நாம் நிச்சயம் தோற்கடிப்போம். நீதித்துறை சுயாதீனத்தில் கை வைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நீதித்துறையில் கை வைத்தது தவறு என்பதை இந்த அரசாங்கத்திற்கு உணர்த்துவோம்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்திற்காகவே எதிரணிகள் அனைத்தும் இன்று ஒன்றுபட்டுள்ளன. கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயற்படுவதே எமது பிரதான பொது நோக்கமாகும். இந்த அடிப்படை விடயங்களுக்காக நாமனைவரும் தொடர்ந்து இணைந்து பயணிப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles